இந்தியாவில் கொரோனாவால் 49 லட்சம் பேர் பலியா? புதிய ஆய்வு தகவலால் அதிர்ச்சி


இந்தியாவில் கொரோனாவால் 49 லட்சம் பேர் பலியா? புதிய ஆய்வு தகவலால் அதிர்ச்சி
x
தினத்தந்தி 22 July 2021 1:35 AM GMT (Updated: 22 July 2021 1:35 AM GMT)

இந்தியாவில் கொரோனாவால் 49 லட்சம் பேர் வரையில் பலியாகி இருக்கக்கூடும் என்ற ஆய்வு தகவல் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று, சுனாமி போல மோசமான விளைவுகளை எற்படுத்தி விட்டது. இது மனித குலம் காணாத சோகமாக மாறி உள்ளது.

அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து உலக அளவில் கொரோனாவால் அதிகபட்ச இறப்புகளை சந்தித்த நாடாக இந்தியா (4 லட்சத்து 18 ஆயிரத்து 480) உள்ளது.

ஆனாலும் இந்த எண்ணிக்கை சரியானதுதானா என்ற கேள்வியை இப்போது எழுப்புகிற வகையில் ஒரு ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது.

இந்த ஆய்வு அறிக்கையை எழுதி வெளியிட்டிருப்பவர்களும் சாமானியர்கள் அல்ல. இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், அமெரிக்காவின் உலகளாவிய மேம்பாட்டுக்கான சிந்தனைக்குழுவின் ஜஸ்டின் சாண்ட்பூர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த அபிஷேக் ஆனந்த் ஆகியோர் தான் இணைந்து எழுதி இருக்கிறார்கள்.

இதில் அவர்கள் கூறி இருக்கும் முக்கிய தகவல்கள் வருமாறு:-

* கொரோனா உயிரிழப்புகளை புள்ளிவிவர நம்பிக்கையுடன் மதிப்பிடுவது என்பது மழுப்பலான ஒன்றாகவே இருக்கும். ஆனால், எல்லா மதிப்பீடுகளுமே கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சம் என்ற அதிகாரபூர்வ எண்ணிக்கையை விட அதிகளவில் இருக்கக்கூடும் என்றே கூறுகின்றன.

* உண்மையான இறப்புகள் என்பது லட்சக்கணக்கில் அல்ல, பல மில்லியன் கணக்கில் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) இருக்கக்கூடும். இது தேசப்பிரிவினை மற்றும் விடுதலைக்கு பிந்தைய மிக மோசமான மனித துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

* கொரோனாவால் ஜனவரி 2020 மற்றும் ஜூன் 2021 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் அதிகப்படியான இறப்புகளாக 3.4 மில்லியன் முதல் 4.9 மில்லியன் வரையில் (34 லட்சம் முதல் 49 லட்சம் வரையில்) நேர்ந்திருக்கலாம்.

* இந்தியாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை குறித்த அதிகாரபூர்வ மதிப்பீடு இல்லை.

* முதலாவதாக இந்திய மக்கள் தொகையில் பாதி எண்ணிக்கையிலானவர்களைக் கொண்டுள்ள 7 மாநிலங்களில் நேரிட்ட மரணங்கள் கணக்கிடப்பட்டு, அந்த எண்ணிக்கையின் விகிதம் ஒட்டுமொத்த நாட்டிலும் இருந்தால் எவ்வளவு இறப்பு ஏற்பட்டிருக்கும் என்ற அடிப்படையில் 34 லட்சம் பேர் இறந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

* இரண்டாவது, சர்வதேச அளவில் வயது அடிப்படையில் தொற்று பாதிப்பினால் இறந்தவர்கள் விகிதம், இந்தியாவின் ‘செரோ சர்வே’ தரவுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனாவால் இந்தியாவில் 4 மில்லியன் பேர் இறந்திருக்கலாம்.

* மூன்றாவது, எல்லா மாநிலங்களிலும் எடுக்கப்பட்ட 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்குபெற்ற நுகர்வோர் பிரமிட் வீட்டு கணக்கெடுப்பின் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அது 4.9 மில்லியன் பேர் இறந்திருக்கலாம் என காட்டுகிறது.

ஒவ்வொரு மதிப்பீட்டிலும் குறைகள் இருப்பதால் ஆய்வாளர்கள் எந்த ஒரு மதிப்பீட்டையும் ஆதரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு தகவல்கள் அதிர்ச்சியில் உறைய வைப்பதாக அமைந்துள்ளன,

Next Story