‘வாட்டர்கேட்’ ஊழலை விட பெகாசஸ் விவகாரம் மிகவும் மோசமானது: மம்தா பானர்ஜி


‘வாட்டர்கேட்’ ஊழலை விட பெகாசஸ் விவகாரம் மிகவும் மோசமானது: மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 22 July 2021 5:45 PM GMT (Updated: 22 July 2021 5:45 PM GMT)

‘வாட்டர்கேட்’ ஊழலை விட பெகாசஸ் விவகாரம் மிகவும் ேமாசமானது என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.

பெகாசஸ் விவகாரம்
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலம் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மத்திய மந்திரிகள், பத்திரிகையாளர்கள் உள்பட 300 பேரின் செல்போன்களை உளவு பார்க்க இலக்காக வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இது தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.இதன் தொடர்ச்சியாக அவர் கடுமையாக சாடினார். நாட்டில் சூப்பர் எமர்ஜென்சியை திணிக்க மத்திய அரசு நூற்றுக்கணக்கான இந்தியர்களை உளவு பார்க்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ‘பெகாசஸ் விவகாரம், அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழலை விட மிகவும் மோசமானது. இது சூப்பர் எமர்ஜென்சி. அவர்கள் (பா.ஜனதா தலைமை) தங்கள் சொந்த அதிகாரிகள் மற்றும் மந்திரிகளை கூட நம்பவில்லை’ என்று தெரிவித்தார்.ஏராளமான ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் போன் உரையாடல்களை கூட பா.ஜனதா தலைமை பதிவு செய்திருப்பதாக கேள்விபட்டதாகவும் மம்தா கூறினார்.

பா.ஜனதா பதிலடி
மம்தாவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மாநில பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது. அதாவது பெகாசஸ் மென்பொருள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் மற்றும் தனது சொந்த கட்சி தலைவர்களையும் மம்தா உளவு பார்ப்பதாக மாநில பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார்.தங்கள் போன் உரையாடல்கள் பதிவு செய்யப்படுவது தெரிந்ததால் திரிணாமுல் காங்கிரசார் வழக்கமான போன் அழைப்புகள் செய்வதில்லை எனவும், குறுந்தகவல்கள் அனுப்புவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.ஆனால் இந்த குற்றச்சாட்டை குறை கூறியுள்ள திரிணாமுல் காங்கிரசார், தேசிய அரசுகள் மட்டுமே இந்த பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்த முடியும் என இஸ்ரேல் நிறுவனம் கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

Next Story