கொரோனாவால் 2 மாதங்களில் 645 குழந்தைகள், பெற்றோரை இழந்து தவிப்பு: மந்திரி ஸ்மிரிதி இரானி


கொரோனாவால் 2 மாதங்களில் 645 குழந்தைகள், பெற்றோரை இழந்து தவிப்பு: மந்திரி ஸ்மிரிதி இரானி
x
தினத்தந்தி 22 July 2021 6:07 PM GMT (Updated: 2021-07-22T23:37:26+05:30)

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் 2 மாதங்களில் 645 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பது மாநிலங்களவையில் மந்திரி ஸ்மிரிதி இரானி வெளியிட்டதகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

645 குழந்தைகள்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி பதில் அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் 645 குழந்தைகள், கொரோனாவுக்கு தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர்.உத்தரபிரதேசத்தில் 158, ஆந்திராவில் 119, மராட்டியத்தில் 83, மத்திய பிரதேசத்தில் 73 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்திருக்கிறார்கள்.இந்த குழந்தைகள் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் எங்கள் அமைச்கத்தையும், கல்வி அமைச்சகத்தையும் கேட்டுள்ளன.இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 
நிவாரணமாக ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏர் இந்தியா பங்குகள் விற்பனை
ஏர் இந்தியா விமான நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், ரூ.60 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடனில் தத்தளித்து வருகிறது. மத்திய அரசு நிதி அளித்தும் மீள முடியவில்லை.இதன் காரணமாக ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் மொத்தமாக விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பங்குகளை வாங்குவதற்கு விருப்பம் உள்ளவர்களை மத்திய அரசு 
வரவேற்றுள்ளது.

இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு சிவில் விமான போக்குவரத்து ராஜாங்க மந்திரி வி.கே. சிங் கூறியதாவது:-
ஏர் இந்தியா பங்குகளை வாங்க பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். தகுதி வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன.இதற்கான நிதி ஏல டெண்டர்கள் செப்டம்பர் 15-ந் தேதி வரை பெறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரத்தில் ஏர் இந்தியா பங்குகளை மொத்தமாக வாங்கி அந்த நிறுவனத்தை கையகப்படுத்த விரும்புவோர் பெயர்களை மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை. நிதி ஏல டெண்டர்களை பொறுத்தமட்டில், பங்குகளை வாங்க விரும்புபவர் முதலில் ரூ.23 ஆயிரத்து 286 கோடி செலுத்த வேண்டியதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story