கேரள வனத்துறை மந்திரியை கண்டித்து பா.ஜ.க. போராட்டம்; போலீசார் தடியடி


கேரள வனத்துறை மந்திரியை கண்டித்து பா.ஜ.க. போராட்டம்; போலீசார் தடியடி
x
தினத்தந்தி 22 July 2021 7:24 PM GMT (Updated: 2021-07-23T00:54:14+05:30)

கேரள மந்திரியை கண்டித்து பா.ஜ.க. நடத்திய போராட்டத்தில் திடீர் மோதல் ஏற்பட்டது. இதனால் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர்.

சில்மிஷம் செய்தவருக்கு ஆதரவு
கேரள மந்திரி சபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏ.கே. சசீந்திரன் வனத்துறை மந்திரியாக உள்ளார். இவருடைய கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர், இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக தெரிகிறது. இந்த பிரச்சினை போலீசில் புகார் கொடுக்கும் வரை சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, முக்கிய பிரமுகருக்கு ஆதரவாக மந்திரி சசீந்திரன், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசியுள்ளார். இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்காமல் விட்டு விடும் படி வற்புறுத்தியதாக தெரிகிறது.

மந்திரி பேச்சால் சர்ச்சை
இந்தநிலையில் மந்திரி சசீந்திரன் பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலானது. இது கேரள மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து மந்திரிக்கு எதிராக எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் கண்டன குரல் எழுப்பினர். இதற்கிடையே நேற்று திருவனந்தபுரத்தில் மந்திரி சசீந்திரனை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், அவரை கண்டித்தும் நேற்று சட்டசபை முன்பு பா.ஜ.க. இளைஞரணியை சேர்ந்த யுவ மோர்ச்சா அமைப்பினரும், மகிளா மோர்ச்சா அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

பா.ஜ.க. பேரணி
அதன்படி நேற்று பாளையம் பகுதியில் திரண்ட பா.ஜ.க.வினர், அங்கிருந்து பேரணியாக புறப்பட்டனர். பேரணி செல்வதற்கு தடை விதித்த போலீசார் சாலையில் இரும்பு தடுப்பு வேலிகளை அமைத்து தடுத்தனர்.ஆனால் பா.ஜ.க.வினர் தடுப்பு வேலிகளை தாண்டி செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

கண்ணீர் புகை குண்டு வீச்சு
நிலைமை எல்லை மீறி செல்வதை உணர்ந்த போலீசார், திடீரென தடியடி நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல், பதிலுக்கு செருப்புகளையும், கற்களையும் வீசி எதிர்தாக்குதலை தொடர்ந்ததால், அங்கு பதற்றம் உருவானது.எனவே போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வர, போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டினர். இவ்வாறு தொடர்ந்து தாக்குதலை நடத்தி போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைய செய்தனர். இந்த தாக்குதலில் போராட்டக்காரர்கள் சிலரும், போலீசார் சிலரும் காயமடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story