மும்பை சுற்றுப்புற மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது; ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பரிதவிப்பு


மும்பை சுற்றுப்புற மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது; ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பரிதவிப்பு
x
தினத்தந்தி 22 July 2021 7:44 PM GMT (Updated: 2021-07-23T01:14:28+05:30)

தொடர் மழையால் ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதால் மும்பை சுற்றுப்புற மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் சுமார் 6 ஆயிரம் பயணிகள் நடுவழியில் சிக்கி தவிக்கின்றனர்.

ஆறுகளில் வெள்ளம்
மராட்டியத்தில் கடந்த ஜூன் 9-ந்தேதி பருவ மழைக்காலம் தொடங்கியது. கடந்த சில நாட்களாக மும்பை உள்பட புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த 22-ந்தேதி மும்பையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது.இந்தநிலையில் மும்பை சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி மற்றும் கோலாப்பூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தது. இந்த மழை நேற்று காலையும் தொடர்ந்தது. இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.குறிப்பாக ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லூன் மற்றும் காம்தே இடையே உள்ள வசிஷ்டி ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் அந்த வழியாக செல்லும் கொங்கன் ரெயில்வே பாலத்தில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ரெயில் சேவை நிறுத்தம்
அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொங்கன் வழித்தடத்தில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதன்காரணமாக இந்த வழித்தடத்தில் செல்லும் சுமார் 9 நீண்ட தூர ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.இவற்றில் தாதர்- சாவந்த்வாடி சிறப்பு ரெயில் சுப்லூன் ரெயில் நிலையத்திலும், சி.எஸ்.எம்.டி.- மட்கான் ஜன்சதாப்தி சிறப்பு ரெயில் கேத் ரெயில்நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.இதன்காரணமாக அந்த ரெயில்களில் சுமார் 5500-ல் இருந்து 6,000 பயணிகள் நடுவழியில் சிக்கி தவித்து 
வருகின்றனர்.

பயணிகளுக்கு உணவு
இதுகுறித்து கொங்கன் ரெயில்வே செய்தி தொடர்பாளர் கிரிஷ் கரந்தீகர் வெளியிட்ட தகவலில், “கொங்கன் வழித்தடத்தில் சிக்கி தவித்துவரும் பயணிகளுக்கு பல சவால்கள் இருந்தபோதிலும் உணவு, தண்ணீர் ரெயில்வே சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.ரெயில்களில் தவிக்கும் அனைத்து பயணிகளுக்கும் தேநீர், சிற்றுண்டி மற்றும் தண்ணீர் வழங்க ஏற்பாடுகளை செய்துள்ளோம்” என்றார்.கொங்கன் ரெயில்வே வழித்தடம் ராய்காட் மாவட்டம் ரோகாவில் இருந்து மங்களூரு அருகே தோக்குர் வரையில் சுமார் 756 கி.மீ. வரை அமைந்து உள்ளது. இந்த கொங்கன் ரெயில்வே வழித்தடம் மராட்டியம் 
உள்பட கோவா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை கடந்து செல்கிறது.ஆறுகள், பள்ளத்தாக்குகள் மற்றும் மலை என சவாலான பாதைகளை கடந்து செல்லக்கூடியது இந்த ரெயில்வே வழித்தடம் ஆகும்.

இதற்கிைடயே வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதி மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு உள்ளார்.


Next Story