வேலைவாய்ப்பை பெருக்க புதிய தொழிற்கொள்கை: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்


வேலைவாய்ப்பை பெருக்க புதிய தொழிற்கொள்கை: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்
x
தினத்தந்தி 22 July 2021 8:58 PM GMT (Updated: 2021-07-23T02:28:56+05:30)

இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய தொழிற்கொள்கையை உருவாக்க திட்டம் இருப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

நமச்சிவாயம் ஆலோசனை
மாவட்ட தொழில் மையத்தில் தொழில் மற்றும் வணிகத்துறை, மாவட்ட தொழில் மையம் மற்றும் கதர், கிராம தொழில் வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் நமச் சிவாயம் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் தொழில்துறை செயலாளர் வல்லவன், இயக்குனர் யாசம் லட்சுமிநாராயணரெட்டி, ரோடியர் மில் நிர்வாக இயக்குனர் சிவக் குமார், துணை இயக்குனர் சந்திரகுமரன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அன்பழகன் மறறும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
புதுவையில் தொழில்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசித்து உள்ளேன். கடந்த காலங்களில் தொழில்கள் எவ்வாறு நடந்தது? தொழிற்சாலைகளில் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்று தருவது, புதிய தொழிற்சாலைகளை கொண்டுவருவது, தொழில் புரிபவர்களுக்கு அரசு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.மேலும் தொழில்துறையில் பதவி உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்தும் பேசியுள்ளேன்.

புதிய தொழிற்கொள்கை
இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய தொழிற்கொள்கையை உருவாக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. தொழில் முதலீட்டாளர்கள் அதிக முதலீடு செய்து சிறந்த தொழிற்சாலைகளை உருவாக்கி வருமானத்தை பெருக்கிடவும், வேலைவாய்ப்பினை பெருக்குவதும்தான் இதன் நோக்கம்.இவற்றையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக செயல் படுத்த உள்ளோம். எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படுவோம்.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Next Story