கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது; 15 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு


கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது; 15 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு
x
தினத்தந்தி 23 July 2021 6:13 PM GMT (Updated: 2021-07-23T23:43:11+05:30)

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. 15 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம்
தற்போது பருவமழை தீவிரம் அடைந்து கொட்டி தீர்த்து வருகிறது. மாநிலத்தில் பெலகாவி, பாகல்கோட்டை, யாதகிரி, ஹாவேரி, கொப்பல், தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, சிக்கமகளூரு, குடகு, கதக், மைசூரு, ஹாசன், சிவமொக்கா, தார்வார் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. பெலகாவியில் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கரையோரம் உள்ள குடியிருப்புகள் மற்றும் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து அங்கு வசிக்கும் மக்களை 
வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைக்க பெலகாவி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சிக்கமகளூரு மாவட்டம் கேத்தனபீடு கிராமத்தில் கனமழை பெய்ததை அடுத்து கொட்டகை இடிந்து விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மூதாட்டி உயிரிழந்தார்
உத்தரகன்னடா மாவட்டத்தில் கால்வாயில் சிக்கி மூதாட்டி இறந்தார். அதே மாவட்டத்தில் சிர்லே நீர்வீழ்ச்சியை பார்க்க சென்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள் 6 பேரை மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்டனர். அதே மாவட்டம் அங்கோலா தாலுகாவில் சிரூர் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தார். உத்தரகன்னடாவில் மட்டும் மழைக்கு ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். 

அங்கோலாவில் கனமழை காரணமாக கங்காவதி ஆற்றின் தீவில் உள்ள ஒரு ஓட்டலை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அந்த ஓட்டலில் இருந்த 15 பேர் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர். அவர்கள் கடற்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.சிரூர் கிராமமே தண்ணீரில் மூழ்கியுள்ளது. அந்த கிராமத்தில் சிக்கியவர்களை மீட்க படகில் சென்ற மீட்பு படையினர் 2 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தின் மேற்கு மலைத்தொடரில் கனமழை பெய்து வருவதால், கர்நாடகத்தில் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு 
ஏற்பட்டுள்ளது. வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி கரைபுரண்டு ஓடுகிறது.

போக்குவரத்து நிறுத்தம்
இதனால் தூத்கங்கா, வேத்கங்கா, இரன்யகேசி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் கிருஷ்ணா ஆற்றின் அருகே செல்லக்கூடாது என்று அந்த மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பெலகாவி மாவட்டம் நிப்பானி தாலுகா யமகரனி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 4 அடி உயரத்திற்கு வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் பெங்களூரு-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பே இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு அந்த சாலை மூடப்பட்டுள்ளது.

11 பாலங்கள் மூழ்கின
பெலகாவி மாவட்டத்தில் 11 பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கி திணறிய 11 பேர் மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு மீட்டனர். பெலகாவி நகரில் கனமழை பெய்து வருவதால் சிவாஜிநகரில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பைரதேவர் மற்றும் குர்கி சாலைகள் மூடப்பட்டுள்ளன.காளி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கத்ரா, குடசல்லி அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் அந்த அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்வரத்து அதிகரிப்பு
கத்ரா அணையில் இருந்து 42 ஆயிரத்து 175 கன அடி நீர் காளி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதுபோல் குடகு மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் அதிகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணையும் நிரம்பியுள்ளது. இதனால் அந்த அணைக்கு வரும் நீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. ஹாவேரி, உப்பள்ளி-தார்வார் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை
ஹாவேரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவ ருகிறது. மாவட்டத்தில் ரட்டிஹள்ளி தாலுகாவில் உள்ள மசூர் மற்றும சுற்றுவட்டார பகுதிகளில் குமடாவதி ஆறு பாய்ந்தோடி வருகிறது. தற்போது இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ரட்டிஹள்ளி தாலுகா நிர்வாகம் மசூர் உள்ளிட்ட கிராமங்களில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆற்றங்கரையை ஒட்டியுள்ள மக்கள், தாழ்வான பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் ஹாவேரி மாவட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாவனூர் தாலுகா கலசூர் கிராமத்தில் ஓடும் வரதா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால் ஈரோ பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன்கரணமாக தேவகிரி, கஞ்சூர், ஹாவேரி, கொல்லூர் பகுதிகளளை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஏரி உடைந்தது
தார்வார் மாவட்டம் அல்னாவர் தாலுகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஹூல்லிகெரேயில் உள்ள இந்திரம்மனா ஏரி நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் ஏரியில் திடீரென்று உடைப்பு  ஏற்பட்டது. இதனால் ஏரியில் நிரம்பி இருந்த தண்ணீர் வெள்ளமென அல்னாவர் டவுனுக்குள் புகுந்தது. இதனால் திலக் நகர், தேசாய் சால், காளி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்தப் பகுதிகளை சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண தங்க வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் உதவி கலெக்டர் கோபாலகிருஷ்ணா, தாசில்தார் அமரேஷ் பம்மர் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டனர்.

ரெயில்கள் நிறுத்தம்
பெலகாவி மாவட்டம் எல்லையில் கோவா மாநிலத்துக்கு உட்பட்ட தூத்சாகர் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் தொடர் மழையால் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ரெயில்வே தண்டவாளம் இடையே இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. இதனால் தண்டவாளத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்த விழுகிறது. இதனால் பெலகாவி- வாஸ்கோடகாமா இடையே ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.அதுபோல் பெலகாவி-கோவாவை இணைக்கும் சோர்லா காட் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை நீடிக்கும்
சிவமொக்கா மாவட்டத்திலும் கனமழை கொட்டி வருவதால், சாகர் தாலுகாவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கர்நாடகத்தில் குறிப்பாக வட கர்நாடகம், கடலோர கர்நாடகம் மற்றும் மலைநாடு மாவட்டங்கள் என 15 மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கர்நாடகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களை தொடர்பு கொண்டு முதல்-மந்திரி எடியூரப்பா பேசினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும்படி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

Next Story