ஒட்டு கேட்கப்படுவதாக நினைத்தால் ராகுல் காந்தி தனது செல்போனை விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்: பா.ஜனதா


ஒட்டு கேட்கப்படுவதாக நினைத்தால் ராகுல் காந்தி தனது செல்போனை விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்: பா.ஜனதா
x
தினத்தந்தி 23 July 2021 6:22 PM GMT (Updated: 23 July 2021 6:22 PM GMT)

ராகுல் காந்தி, தனது போன் ஒட்டு கேட்கப்படுவதாக நினைத்தால் அதை விசாரணைக்கு ஒப்படைக்குமாறு பா.ஜனதா அறிவுறுத்தி இருக்கிறது.

பெகாசஸ் விவகாரம்
இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் மூலம் இ்ந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டு கேட்க இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசின் மீது கடுமையாக குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு
செல்போன் ஒட்டு கேட்பு பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பெயரும் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், தனது அனைத்து போன்களும் ஒட்டு கேட்கப்படுவதாக அவர் கூறியிருந்தார்.மேலும் இந்தியாவுக்கும், அதன் ஜனநாயக நிறுவனங்களுக்கும் எதிராக பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் இந்த உளவு மென்பொருளை பயன்படுத்துவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

விசாரணை நடத்தப்படும்
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு நேற்று பதிலடி கொடுத்துள்ள பா.ஜனதா, யாருடைய போனும் ஒட்டு கேட்கவில்லை என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜ்யவர்தன் ரத்தோர் கூறுகையில், ‘ஒரு ஜனநாயக நாட்டில் யாருக்கும் தாங்கள் நினைப்பதை செய்வதற்கு உரிமை உண்டு. தனது செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாக ராகுல் காந்தி நினைத்தால், அவர் தனது போனை விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும்’ என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றம் முடக்கம்
நாட்டின் வளர்ச்சியை காங்கிரசால் ஏற்க முடியவில்லை என கூறிய ரத்தோர், அதனால்தான் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிக்கொண்டு நாடாளுமன்றத்தை முடக்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.2014 மற்றும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்ட பிறகு, ஏதாவது காரணத்தை சொல்லி நாடாளுமன்றத்தை முடக்குவது என காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Next Story