கர்நாடக முதல்-மந்திரி மாற்றம் குறித்து எடியூரப்பா தெளிவுபடுத்திவிட்டார்: மந்திரி சி.பி.யோகேஷ்வர்


கர்நாடக முதல்-மந்திரி மாற்றம் குறித்து எடியூரப்பா தெளிவுபடுத்திவிட்டார்: மந்திரி சி.பி.யோகேஷ்வர்
x
தினத்தந்தி 23 July 2021 6:34 PM GMT (Updated: 23 July 2021 6:46 PM GMT)

கர்நாடக முதல்-மந்திரி மாற்றம் குறித்து எடியூரப்பா தெளிவுபடுத்திவிட்டார் என்று சுற்றுலாத்துறை மந்திரி சி.பி.யோகேஷ்வர் கூறினார்.

சுற்றுலாத்துறை மந்திரி சி.பி.யோகேஷ்வர் பெங்களூரு அருகே உள்ள நந்தி மலையில் ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கருத்து கூற முடியாது
முதல்-மந்திரி மாற்றம் குறித்து எடியூரப்பாவே தெளிவுபடுத்திவிட்டார். இந்த விஷயத்தில் எனக்கு எதுவும் தெரியாது. ஆட்சி தலைமை மாற்றம் ஏற்பட்ட பிறகு மும்பை நண்பர்களுக்கு மீண்டும் மந்திரி பதவி கிடைக்குமா? என்பது பற்றி நான் எந்த கருத்தும் கூற முடியாது. மந்திரி பதவி யாருக்கும் நிரந்தரமல்ல. குமாரசாமி எனது அரசியல் எதிரி. அவரது அரசியல் நிலைப்பாடுகளில் எப்போதும் இரட்டை நிலை இருக்கிறது. உதவிகள் வேண்டும் என்றால் எடியூரப்பாவை சந்தித்து அவற்றை பெறுகிறார். அதன் பிறகு எடியூரப்பாவை அவர் விமர்சிக்கிறார். அதனால் தான் குமாரசாமியை அருகில் சேர்க்க வேண்டாம் என்று நான் எடியூரப்பாவிடம் கூறினேன். எங்கள் கட்சி மேலிடமும் முதல்-மந்திரியிடம் கூறியுள்ளது. முதல்-மந்திரியிடம் உதவிகளை பெற்று அவரையே விமர்சிப்பது சரியா?.

நான் பேச மாட்டேன்
என்னை சி.டி. யோகேஷ்வர் என்று டி.கே.சுரேஷ் எம்.பி. கூறியுள்ளார். எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். எடியூரப்பாவை மடாதிபதிகள் சந்தித்து வருகிறார்கள். மடாதிபதிகள் பெரியவர்கள். அவர்களை பற்றி நான் பேச மாட்டேன்.

இவ்வாறு சி.பி.யோகேஷ்வர் கூறினார்.

Next Story