கர்நாடக முதல்-மந்திரி மாற்றம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்


கர்நாடக முதல்-மந்திரி மாற்றம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்
x
தினத்தந்தி 23 July 2021 7:06 PM GMT (Updated: 23 July 2021 7:06 PM GMT)

முதல்-மந்திரி மாற்றம் குறித்து கருத்து கூறு விரும்பவில்லை என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

டி.கே.சிவக்குமார்
முன்னாள் மத்திய மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஆஸ்கார் பெர்னாண்டஸ், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவரை, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் வைத்து டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபையில் கேள்வி எழுப்புவேன்
கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றம் குறித்து 26-ந்தேதி தகவல் வரலாம் என்று கூறியிருந்தேன். நன்றாக ஆட்சி செய்யவில்லை என்று முதல்-மந்திரி மாற்றப்படுகிறார். முன்பு 2 என்ஜின்கள் (கூட்டணி ஆட்சி) பொருத்தப்பட்ட ஆட்சி சரியில்லை என பா.ஜனதாவினர் கூறினார்கள். இதனால் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு இவர்கள் (பா.ஜனதா) ஆட்சிக்கு வந்தனர். பா.ஜனதாவின் ஆட்சியில் எந்த பணிகளும் நடக்கவில்லை.ஆட்சியாளர்களின் பேச்சை அரசு அதிகாரிகள் கேட்பதில்லை. முதல்-மந்திரி பதவி பறிபோக உள்ளதால் எடியூரப்பா அவசர, அவசரமாக கோப்புகளில் கையெழுத்து போட்டு அதிக நிதி ஒதுக்குகிறார். இதுகுறித்து சட்டசபையில் கேள்வி எழுப்புவேன்.

கருத்து கூற விரும்பவில்லை
முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு மடாதிபதிகள் ஆதரவு கொடுக்கிறார்கள். தேர்தல் சமயத்தில் கூட நாங்கள் ஆதரவு கேட்டபோது மடாதிபதிகள் ஆதரவு தருகிறோம் என்று கூறினர். தற்போது மடாதிபதிகள் தங்களின் கருத்தை தெரிவிக்கிறார்கள். அதனை தவறு என கூற முடியாது. முதல்-மந்திரி மாற்றப்படுவது குறித்து கருத்து கூறு விரும்பவில்லை. முதல்-மந்திரியை மாற்றுவது அவர்களின் கட்சி விவகாரம். அதில் தலையிட நான் விரும்பவில்லை. எனக்கு அவசியமும் இல்லை.காங்கிரசில் இருந்து விலகியவர்கள் திரும்பி வருவார்கள். ஆனால் அவர்களை சேர்ப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும். காங்கிரசில் இருந்து விலகி சென்றவர்கள் யாரும் இதுவரை என்னிடம் பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story