வைரஸ் உருமாற்றத்தால் கொரோனா 3-வது அலை வரலாம்: சுகாதாரத்துறை மந்திரி


வைரஸ் உருமாற்றத்தால் கொரோனா 3-வது அலை வரலாம்: சுகாதாரத்துறை மந்திரி
x
தினத்தந்தி 23 July 2021 8:46 PM GMT (Updated: 2021-07-24T02:16:13+05:30)

வைரசில் ஏற்படும் உருமாற்றத்தால் கொரோனா 3-வது அலை வரக்கூடும் என்று மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார்.

3-வது அலை
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஒரு கேள்விக்கு எழுத்துமூலம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

நோய் தீவிரத்தையும், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதையும், மரணங்கள் ஏற்படுவதையும் தடுப்பதில் கொரோனா தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. உலகம் முழுவதும் எண்ணற்ற கொரோனா அலைகள் உருவாகி வருகின்றன.வைரசில் ஏற்படும் உருமாற்றத்தாலோ அல்லது எளிதில் நோய் தாக்கக்கூடிய மக்களாலோ 3-வது அலை வரலாம். அதுவும், மருந்துகள் மற்றும் இதர அம்சங்களை பொறுத்து இருக்கிறது.மற்ற உருமாறிய கொரோனாக்களை விட டெல்டா வைரசால் நோய் பரவும் தன்மை அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் பாதிப்பு
டெல்டா வைரசால் குழந்தைகள் அதிகமாக பாதிப்படைவார்கள் என்பதற்கு விஞ்ஞானரீதியான ஆதாரம் எதுவும் இல்லை. குழந்தைகளை தாக்கினாலும், அறிகுறி இல்லாமலோ அல்லது லேசான அறிகுறிகளுடனோ தான் இருப்பார்கள். அவர்களுக்கு தீவிர நோயாக உருவெடுக்காது. 3-வது அலையை தடுக்க கொரோனா பயண பாதையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். மருத்துவ கட்டமைப்புகளை அதிகரிக்குமாறு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறோம். தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் வசதி ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளன.18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story