கர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த இடங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு எடியூரப்பா உத்தரவு


கர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த இடங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு எடியூரப்பா உத்தரவு
x

கர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த இடங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

“வெள்ள பாதிப்பு குறித்து பெலகாவி மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு பேசினேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைவாக செய்யும்படி உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் உயிர்களை பாதுகாக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நிதி உதவி தேவைப்பட்டால் உடனே அரசை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தி இருக்கிறேன். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களின் கலெக்டர்களுடன் பேசியுள்ளேன். நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளேன். மழை பாதிப்புகள் குறித்து தொடர்ந்து தகவல்களை சேகரித்து வருகிறேன். கனமழை பெய்து வருவதால் மாவட்ட பொறுப்பு மந்திரிகளை தங்களின் மாவட்டங்களுக்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளேன். வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது, நிவாரண உதவிகளை வழங்குவது போன்ற பணிகளை தீவிரமாக்கும்படி கூறியுள்ளேன்.”

இவ்வாறு எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார்.

Next Story