கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவு; எடியூரப்பா நாளை ராஜினாமா?


கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவு; எடியூரப்பா நாளை ராஜினாமா?
x
தினத்தந்தி 24 July 2021 7:18 PM GMT (Updated: 24 July 2021 7:18 PM GMT)

முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்று நாளையுடன் (திங்கட்கிழமை) 2 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்ய பா.ஜனதா மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருப்பதாக தெரிகிறது. அவர் நாளை ராஜினாமா செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

2 ஆண்டு ஒப்பந்தம்
கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. அந்த கூட்டணி ஆட்சியும் 2 ஆண்டுக்கு முன்பு கவிழ்ந்தது. இதையடுத்து, முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. எடியூரப்பாவுக்கு 75 வயதுக்கு மேல் ஆகி இருந்த நிலையிலும், அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது.பா.ஜனதா கட்சியில் 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல்-மந்திரி உள்ளிட்ட எந்த பதவியும் வழங்கப்படுவதில்லை. ஆனால் தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வர எடியூரப்பா காரணமாக இருந்தவர் என்பதால், அவர் 75 வயதை கடந்திருந்தாலும், முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது. அப்போது பா.ஜனதா 
மேலிடமும், முதல்-மந்திரி எடியூரப்பாவும் ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே முதல்-மந்திரி பதவியில் இருக்க வேண்டும் என்பது தான் அந்த ஒப்பந்தம் ஆகும்.

கட்சி மேலிடம் உத்தரவிட்டால்...
இதுபற்றி நேற்று முன்தினம் பா.ஜனதா எம்.பி.யும். மூத்த தலைவருமான சீனிவாச பிரசாத் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நாளையுடன் (திங்கட்கிழமை) முதல்-மந்திரியாக பதவி ஏற்று 2 ஆண்டுகளை எடியூரப்பா நிறைவு செய்ய உள்ளார். இதனால் அதன்படி, எடியூரப்பாவுக்கு வயதாகி விட்டதாலும், கட்சி மேலிடத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம்படியும் நாளை முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்யலாம் என்ற தகவல்கள் பரவி வருகிறது.அதே நேரத்தில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும் விவகாரத்தில் கட்சி மேலிடம் உத்தரவிட்டால், கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்று 2 நாட்களுக்கு முன்பாகவே எடியூரப்பா கூறியுள்ளார். பதவியை ராஜினாமா செய்யும் விவகாரம் குறித்து எடியூரப்பா தனது முடிவை அறிவித்ததை தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பும், ஆதரவும் பெருகி வருகிறது. ஒருபுறம் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய கூடாது என எடியூரப்பாவை மடாதிபதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பதவிக்கு போட்டி
மற்றொரு புறம் முதல்-மந்திரி பதவிக்காக கர்நாடக பா.ஜனதாவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதாவது மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த மந்திரியான முருகேஷ் நிரானி, அதே சமுதாயத்தை சேர்ந்த அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ. ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்தவரும், மந்திரியுமான ஆர்.அசோக் உள்ளிட்டோர் முதல்-மந்திரி பதவி வழங்கும்படி கட்சி மேலிடத்திடம் கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.ஆனால் எடியூரப்பாவுக்கு அடுத்து கர்நாடகத்தில் முதல்-மந்திரி பதவியை யாருக்கு கொடுக்கலாம் என்பது குறித்து பா.ஜனதா மேலிடம் இன்னும் இறுதி முடிவு எடுத்து வெளிப்படையாக அறிவிக்காமல் உள்ளது. எடியூரப்பா லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், அதே சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்-மந்திரியாக்குவதா?, அல்லது வேறு சமுதாயத்தை சேர்ந்தவரை முதல்-மந்திரியாக்குவதா? என்பது பற்றி பா.ஜனதா மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

நாளை ராஜினாமா?
அதே நேரத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று எடியூரப்பா அறிவித்திருந்தாலும், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும்படி இதுவரை பா.ஜனதா மேலிடம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. கட்சி மேலிடம் உத்தரவிடும் வரை முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா நீடிப்பது உறுதியாகி உள்ளது. நாளையுடன் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளதால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியை ராஜினாமா செய்யும்படி பா.ஜனதா மேலிடம் உத்தரவிடலாம் என்ற தகவல்கள் பரவி வருகிறது. அவ்வாறு எடியூரப்பாவுக்கு 
கட்சி மேலிடம் இன்று உத்தரவிட்டால், நாளை மாலை கவர்னர் தாவா்சந்த் கெலாட்டை சந்தித்து முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் தற்போது கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.

கர்நாடக அரசியலில் பரபரப்பு
இந்த சந்தர்ப்பத்தில் முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்துவிட்டு, புதியவர் நியமிக்கப்பட்டால், மழை, வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதில் மிகவும் சிரமம் ஏற்படும். இதன் காரணமாக மழைக்காலம் முடியும் வரை இன்னும் சில நாட்கள் எடியூரப்பாவே முதல்-மந்திரி பதவியில் நீடிக்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டு இருப்பதாகவும், புதிய முதல்-மந்திரி யார்? என்பதை அறிவித்து விட்டு, அதன்பிறகு பதவியை ராஜினாமா செய்யும்படி எடியூரப்பாவுக்கு உத்தரவிட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்வது உறுதியாகி இருக்கும் நிலையில், அவர் எப்போது ராஜினாமா செய்வார்?, அடுத்த முதல்-மந்திரி யார்? என்பதை அறிவிக்காமல் பா.ஜனதா மேலிடம் இருந்து வருவது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகத்தின் அடுத்த முதல்-மந்திரி யார்? என்பதை எதிர்பார்த்து பா.ஜனதாவினர் மட்டுமின்றி எதிர்க்கட்சி தலைவர்களும் காத்திருக்கின்றனர்.


Next Story