விஞ்ஞானி நம்பி நாராயணன் கைது விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல்


விஞ்ஞானி நம்பி நாராயணன் கைது விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 24 July 2021 11:40 PM GMT (Updated: 24 July 2021 11:40 PM GMT)

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், பணத்துக்காக ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைது செய்யப்பட்டார். பின்னர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்ட நம்பி நாராயணன், தன்னை கைது செய்த கேரள போலீஸ் அதிகாரிகள் மூவர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், தவறிழைத்த போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் விசாரணை கமிட்டி அமைப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.நீதிபதி ஜெயின் கமிட்டி அதன் விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சீலிட்ட உறையில் கடந்த ஏப்ரல் முதல் வாரம் தாக்கல் செய்தது.இந்நிலையில், இந்த விவகாரம் 
தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

வாதங்களை பரிசீலித்த நீதிபதிகள், இஸ்ரோ வழக்கில் விஞ்ஞானி நம்பி நாராயணனை கைது செய்த கேரள போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 3 மாதங்களில் விசாரித்து அறிக்கை அளிக்க சி.பி.ஐ. இயக்குனருக்கு உத்தரவிட்டனர்.அதையடுத்து, சி.பி.ஐ. கடந்த மே 3-ந்தேதி வழக்கு பதிவு செய்தது.கேரள போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான அறிக்கையை சி.பி.ஐ., சுப்ரீம் கோர்ட்டில் சீலிட்ட உறையில் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Next Story