மராட்டியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்: உத்தவ் தாக்கரே


மராட்டியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்: உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 25 July 2021 7:27 PM GMT (Updated: 25 July 2021 7:27 PM GMT)

மராட்டியத்தில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே வெள்ள சேத பகுதிகளை நேரில் பார்வையிட்ட முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவியையும் அரசு செய்யும் என பேட்டி அளித்தார்.

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக பெய்த வரலாறு காணாத மழையால் மேற்கு மராட்டியம், கொங்கன் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

149 பேர் பலி
குறிப்பாக ரத்னகிரி, ராய்காட், சத்தாரா, கோலாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தன. இந்த மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதேபோல மராட்டியத்தில் மழைக்கு ராய்காட்டில் 52 பேரும், ரத்னகிரியில் 21 பேரும், சத்தாராவில் 13 பேரும், தானேயில் 12 பேரும், கோலாப்பூரில் 7 பேரும், மும்பையில் 4 பேரும், புனேயில் ஒருவரும் என 113 பேர் பலியானதாக அரசு தகவல் வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் சாதார மாவட்டத்தில் நேற்று நடந்த மீட்பு பணியில் மேலும் 36 பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 149 ஆக 
அதிகரித்து உள்ளது. இதேபோல 64 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மழைக்கு இதுவரை 50 பேர் காயமடைந்து இருப்பதாகவும் அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, புனேயில் மட்டும் 875 கிராமங்கள் மழைக்கு சேதமடைந்து உள்ளன. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்து 312 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரத்னகிரியில் சுமார் 2 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சிப்லூனில் உள்ள வஷிஸ்டி நதியின் பாலம் மழைக்கு 
சேதமடைந்து உள்ளது.

முதல்-மந்திரி ஆய்வு
இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லூன் பகுதியை ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் திடீரென முதல்-மந்திரியின் வாகனத்தை வழிமறித்து தங்களது குறைகளை கூறினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முதல்-மந்திரியின் வாகனத்தை மறித்த பெண் ஒருவர் கூறுகையில், "எங்களுக்கு வாக்குறுதிகள் எதுவும் வேண்டாம், உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என முதல்-மந்திரியிடம் கூறினோம். கடந்த 3 நாட்களாக வெள்ளப்பாதிப்புகளை கணக்கிட யாரும் வரவில்லை. நாங்கள் 
எல்லாவற்றையும் சுத்தம் செய்த பிறகு அதிகாரிகள் வந்தால், வெள்ளப்பாதிப்பை எப்படி கணக்கிடுவார்கள்." என்றார். இதற்கிடையே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சிப்லூன் பகுதியில் உள்ள பொதுமக்கள், தொழில் அதிபர்கள், கடைக்காரர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர் சிப்லூனில் இயல்பு நிலை திரும்ப அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதி அளித்தார். மேலும் அவர் கூறுகையில், "நீண்ட கால நிவாரணப்பணிகளுக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது. மீட்பு பணிகளில் ஈடுபட முப்படைகளை மத்திய அரசு அனுப்பி வைத்து இருந்தது. உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்" என்றார்.

மாவட்டந்தோறும் பேரிடர் மீட்பு படை
இதேபோல தேசிய பேரிடர் மீட்பு படை போன்ற படை மாநிலத்தின் எல்லா மாவட்டங்களிலும் அமைக்கப்படும் எனவும் கூறினார். இது குறித்து அவர் பேசும்போது, "அடிக்கடி இயற்கை பேரழிவுகள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, மாவட்டந்தோறும் தேசிய பேரிடர் மீட்பு படை போன்ற படை அமைக்கப்படும். மேலும் மாநிலம் மழையால் மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கும் நிலையில் நாளை (27-ந் தேதி) எனது பிறந்தநாளை கொண்டாட மாட்டேன். யாரும் பேனர் வைக்கவோ அல்லது என்னை சந்திக்கவோ வரவேண்டாம்’’ என்றார்.இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இன்று மேற்கு 
மராட்டிய பகுதிகளில் வெள்ளபாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளார்.

இதேபோல நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தலாய் கிராமத்தில் மத்திய மந்திரி நாராயண் ரானே, எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திரபட்னாவிஸ், பிரவீன் தாரேகர் ஆகியோர் ஆய்வு செய்தனர். மழை பாதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யமாறு பிரதமர் மோடி கூறியதாக நாராயண் ரானே தெரிவித்தார். மேலும் நிலச்சரிவில் சேதமடைந்த வீடுகள் பிரதம மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ் கட்டி கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story