கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்ய அயோத்தி சென்றார் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்


கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்ய அயோத்தி சென்றார் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்
x
தினத்தந்தி 25 July 2021 8:51 PM GMT (Updated: 25 July 2021 8:51 PM GMT)

கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்ய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்தி சென்றார்.

அயோத்தி,

உத்தரபிரதேசத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மாநில அரசு முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. பரிசோதனை அதிகரித்தல், தடுப்பூசி டோஸ்களை அதிகரித்தல் என தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் நடந்து வரும் இந்த பணிகளை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேரடியாக பார்வையிட்டு வருகிறார்.

அந்தவகையில் நேற்று அவர் அயோத்திக்கு சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். இதற்காக ராஜா தசரத் மருத்துவக்கல்லூரிக்கு சென்ற அவர் அங்கு கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் சமீபத்தில் நிறுவப்பட்ட ஆக்சிஜன் ஆலையை பார்வையிட்ட அவர், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பிருப்பதாக கருதப்படும் சூழலில் அதை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் அறிவுறுத்தினார். இரட்டை முககவசம், சமூக இடைவெளி, கைகளை சுகாதாரமாக வைத்திருத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

முன்னதாக ராமஜென்மபூமிக்கு சென்ற யோகி ஆதித்யநாத், ராம் லல்லா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் அங்குள்ள அனுமன் கோவிலில் ஆரத்தி வழிபாடும் மேற்கொண்டார்.

Next Story