அ.தி.மு.க ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் நன்மைக்காக தொடர்ந்து பாடுபடும் - எடப்பாடி பழனிசாமி


அ.தி.மு.க ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் நன்மைக்காக தொடர்ந்து பாடுபடும் - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 26 July 2021 9:20 AM GMT (Updated: 26 July 2021 9:20 AM GMT)

எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் இருவரும் ஒரே நாளில் தனித்தனியாக விமானத்தில் புறப்பட்டு டெல்லி சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

புதுடெல்லி

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. மத்தியில் பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இருப்பதால், இங்கு ஆட்சியில் இருந்தபோது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து வந்தனர்.

தற்போது, தமிழகத்தில் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்கு விமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.

அதேபோல், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9.30 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இருவரும் ஒரே நாளில் தனித்தனியாக விமானத்தில் புறப்பட்டு டெல்லி சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடியை நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள அவரது அறையில் இருவரும்  ஒன்றாக சந்தித்து பேசினார்கள். 

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அரசியல் தொடர்பான சந்திப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா விவகாரம், முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் மேற்கொண்ட பிரதமருக்கு நானும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் நன்றி தெரிவித்தோம். தமிழகத்திற்கு  கொரோனா தடுப்பூசி தேவையான அளவு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளொம். 

கர்நாடகவில் மேகதாது அணைகட்ட அனுமதி வழக்க கூடாது என கோரிக்கை வைத்து உள்ளோம்.

தமிழகம் நீர் பற்றாக்குறை மாநிலமாக உள்ளது, எனவே கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம். தமிழ்நாட்டில் சாலைகள் அமைக்கும் பணியை விரைவுபடுத்த கேட்டு கொண்டோம்.  தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்த நிறுத்த கோரிக்கை வைத்துள்ளோம். அ.தி.மு.க ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் நன்மைக்காக தொடர்ந்து பாடுபடும் கட்சி அ.தி.மு.க என கூறினார்.



Next Story