கார்கில் வெற்றி நாள்: ஜனாதிபதி மரியாதை


கார்கில் வெற்றி நாள்: ஜனாதிபதி மரியாதை
x
தினத்தந்தி 26 July 2021 5:30 PM GMT (Updated: 26 July 2021 5:30 PM GMT)

ஜனாதிபதியின் லடாக் பயணம், மோசமான வானிலையால் ரத்து செய்யப்பட்டது. அதனால், கார்கில் போரில் இறந்த வீரர்கள் நினைவாக வேறு இடத்தில் அவர் மரியாதை செலுத்தினார்.

4 நாள் பயணம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு 4 நாள் பயணமாக முன்தினம் சென்றார்். ஸ்ரீநகரில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கினார்.அவரது வருகையையொட்டி, காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகைக்கு செல்லும் 2 முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.கார்கில் போரில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை விரட்டியடித்து இந்தியா வெற்றி பெற்றதன் 22-வது வெற்றி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, லடாக்கில் திராஸ் பகுதியில், கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்கள் நினைவாக கட்டப்பட்ட போர் நினைவுச்சின்னத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

ரத்து
இதற்காக ஜனாதிபதி ஸ்ரீநகரில் இருந்து புறப்பட தயாரானார். ஆனால், மோசமான வானிலை காரணமாக, விமானத்தால் புறப்பட இயலவில்லை. இதனால், அவரது லடாக் பயணம் ரத்து செய்யப்பட்டது. உடனே மாற்று திட்டமாக பாரமுல்லாவுக்கு ஜனாதிபதி சென்றார். அங்குள்ள போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, உயர்ந்த மலை சிகரமான குல்மார்க்கில் உள்ள ராணுவ பள்ளிக்கு சென்றார். படையினருடன் உரையாடினார்.

பட்டமளிப்பு விழா
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், செவ்வாய்க்கிழமை ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 19-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசுகிறார். புதன்கிழமை அவர் டெல்லி திரும்புகிறார்.கடந்த 2019-ம் ஆண்டிலும், மோசமான வானிலை காரணமாக, ஜனாதிபதியின் திராஸ் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிறகு, ஸ்ரீநகரில் 15-வது ராணுவ படைப்பிரிவு தலைமையகத்தில் அவர் மரியாதை செலுத்தினார்.

Next Story