பா.ஜனதா தலைவர்களே எடியூரப்பாவின் முதுகில் குத்திவிட்டனர்: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்


பா.ஜனதா தலைவர்களே எடியூரப்பாவின் முதுகில் குத்திவிட்டனர்: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்
x
தினத்தந்தி 26 July 2021 8:07 PM GMT (Updated: 26 July 2021 8:07 PM GMT)

பா.ஜனதா தலைவர்களே எடியூரப்பாவின் முதுகில் குத்திவிட்டனர் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் தொந்தரவு...

முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்திருக்கிறார். காங்கிரஸ் கட்சி எடியூரப்பாவுக்கு எந்த ஒரு தொந்தரவும் கொடுத்ததில்லை. கொரோனா சந்தர்ப்பத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும்படி காங்கிரஸ் வலியுறுத்தியது. அதை தவிர்த்து காங்கிரஸ் கட்சி, எடியூரப்பாவுக்கு எந்த விதமான நெருக்கடியும் கொடுத்ததில்லை.பா.ஜனதா தலைவர்களே எடியூரப்பாவுக்கு தொல்லை கொடுத்தனர். எடியூரப்பா மீது கவர்னரிடம் ஈசுவரப்பா புகார் அளித்தார். முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றுவதற்கு தேர்வு எழுதி இருப்பதாக மந்திரி யோகேஷ்வர் கூறி வந்தார். யத்னால் எம்.எல்.ஏ. எடியூரப்பாவுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை கூறி வந்தார். அவர்கள் மீது பா.ஜனதா மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முதுகில் குத்தி விட்டனர்

கர்நாடகம் மற்றும் தேசிய அளவிலான பா.ஜனதா தலைவர்கள், எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றதில் இருந்தே தொந்தரவு கொடுத்து வந்தனர். எடியூரப்பாவுக்கு பா.ஜனதா மேலிட தலைவர்களிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. எடியூரப்பாவுக்கு எதிராக பேசியவர்களை கட்சி மேலிடம் கண்டுகொள்ளவில்லை. பா.ஜனதா தலைவர்களே எடியூரப்பாவின் முதுகில் குத்தி விட்டனர். அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து கீழே இறக்கி விட்டனர்.அடுத்த முதல்-மந்திரி யார்? என்பது பற்றி காங்கிரசுக்கு கவலை இல்லை. அதுபற்றி பா.ஜனதா மேலிடம் தான் சிந்திக்க வேண்டும். எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்திருப்பதால் காங்கிரசுக்கு, எந்த ஆதாயமும் இல்லை. தற்போது எடியூரப்பா பதவி விலகி உள்ளார். 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சியையே மக்கள் அதிகாரத்தில் இருந்து விலக்குவார்கள். காங்கிரசில் சேர விரும்புபவர்கள் யார் வேண்டுமானாலும், விண்ணப்பிக்கலாம். அதற்கு எந்த தடையும் இல்லை.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story