தேசிய செய்திகள்

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா? கவர்னர் தமிழிசையுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை + "||" + Will local elections be held in Pondicherry? State Election Commissioner consults with Governor Tamilisai

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா? கவர்னர் தமிழிசையுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா? கவர்னர் தமிழிசையுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை மாநில தேர்தல் ஆணையர் சந்தித்து பேசிய நிலையில் புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
புதுவை வரலாற்றில் சுதந்திரத்துக்குப்பின் 2 முறை மட்டுமே உள்ளாட்சி தேர்தல் நடந்துள்ளது. அதாவது கடந்த 1968-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின் நீதிமன்ற உத்தரவின்படி 38 ஆண்டுகளுக்குப்பின் கடந்த 2006-ல் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது தேர்வான மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 2011-ம் ஆண்டு நிறைவடைந்தது. அதன்பின் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக பல வழக்குக்குகள் தொடரப்பட்டன.

மாநில தேர்தல் ஆணையர்
அப்போது வார்டு மறு வரையறை செய்து தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக வார்டுகளும் மறுவரையறை செய்யப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் தேர்தல் அறிவிப்பு மட்டும் வெளி வரவில்லை.அதுமட்டுமின்றி தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக கடந்த கால காங்கிரஸ் அரசுக்கும் கவர்னர் கிரண்பெடிக்கும் இடையே மிகப்பெரிய பனிப்போர் நடந்தது. இறுதியாக ராய் பி.தாமஸ் என்ற ஓய்வுபெற்ற அதிகாரி மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

வாக்காளர் பட்டியல் வெளியீடு
இத்தகைய சூழலில் மாகியை சேர்ந்த அசோக் குமார் என்பவர் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் வருகிற அக்டோபர் மாதம் 5-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.இதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள் சார்பில் வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.இந்தநிலையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

கவர்னருடன் சந்திப்பு
இந்தநிலையில் மாநில தேர்தல் ஆணையரான ராய் பி.தாமஸ் கவர்னர் மாளிகையில் நேற்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினார்.இதுதொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார் என்று கூறப்பட்டுள்ளது.எனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி வருகிற அக்டோபர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராகி வருவதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

வார்டுகள்
வார்டு மறுசீரமைப்புக்கு முன்பு புதுவை நகராட்சியில் 42 வார்டுகளும், உழவர்கரை நகராட்சியில் 37 வார்டுகளும் இருந்தன. தற்போது புதுவை நகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 33 ஆக சுருங்கியுள்ளது. அதே நேரத்தில் உழவர்கரை நகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.புதுவை மாநிலத்தை பொறுத்தவரை புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 5 நகராட்சி தலைவர்கள் 116 வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. அதாவது புதுச்சேரி 33, உழவர்கரை 42, காரைக்கால் 17, மாகி 10, ஏனாம் 14.

1,147 மக்கள் பிரதிநிதிகள்
இதுதவிர பாகூர், அரியாங்குப்பம், வில்லியனூர், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, திருப்பட்டினம், திருநள்ளாறு உள்பட 10 கொம்யூன் பஞ்சாயத்துகள் உள்ளன. இவற்றின் மூலம் 108 உறுப்பினர்கள், 108 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் 812 உறுப்பினர் பதவிகள் உள்ளன.ஒட்டுமொத்தமாக உள்ளாட்சி அமைப்புகளில் 1,147 மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.