70 ஆண்டுகள் கூட என்னை சிறையில் அடையுங்கள்; ஆனால் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள்: ரன்தீப் சிங் சுர்ஜீவாலா


70 ஆண்டுகள் கூட என்னை சிறையில் அடையுங்கள்; ஆனால் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள்:  ரன்தீப் சிங் சுர்ஜீவாலா
x
தினத்தந்தி 26 July 2021 10:35 PM GMT (Updated: 2021-07-27T04:05:29+05:30)

70 ஆண்டுகள் கூட என்னை சிறையில் அடையுங்கள், ஆனால் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள் என ரன்தீப் சிங் சுர்ஜீவாலா கூறியுள்ளார்.




புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இயற்றியுள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லையில் கடந்த 9 மாதங்களாக விவசாய அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை.  வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  இதனால், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

கடந்த 19ந்தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்க, நாடாளுமன்றத்துக்கு வெளியே ஜந்தர் மந்தரில் விவசாயிகள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வேளாண்மை சட்டங்களுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்தார். டிராக்டரை தானே ஓட்டி வந்தார். தனது வீட்டில் இருந்தே நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் விவசாய அமைப்பை சேர்ந்தவர்களுடன் பேரணியாக சென்றார்.

ராகுல் காந்தியுடன் வந்த ரன்தீப் சிங் சுர்ஜீவாலா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். காலையில் கைது செய்யப்பட சுர்ஜீவாலா, ஸ்ரீனிவாஸ் ஆகியோர் மாலையில் 7 மணி நேரம் கழித்து விடுதலை செய்யப்பட்டனர்.

இதுபற்றி சுர்ஜீவாலா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அவர் கூறும்போது, நாட்டின் வேளாண்மையையும், விவசாயிகளையும் பாதுகாப்பதற்கான போராட்டம் தொடரும்.  அவர்கள் என்னை 7 மணி நேரம் சிறையில் அடைத்தனர்.  70 ஆண்டுகள் கூட என்னை சிறையில் அடையுங்கள்.  ஆனால் அந்த கருப்பு (வேளாண் சட்டங்களை) சட்டங்களை வாபஸ் பெறுங்கள் என வலியுறுத்தினார்.


Next Story