தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்ட விதிகளை வகுக்க மேலும் 6 மாதம் காலநீட்டிப்பு: மத்திய மந்திரி + "||" + MHA seeks six more months till January 2022 to form rules for CAA

குடியுரிமை திருத்த சட்ட விதிகளை வகுக்க மேலும் 6 மாதம் காலநீட்டிப்பு: மத்திய மந்திரி

குடியுரிமை திருத்த சட்ட விதிகளை வகுக்க மேலும் 6 மாதம் காலநீட்டிப்பு: மத்திய மந்திரி
குடியுரிமை திருத்த சட்ட விதிகளை வகுப்பதற்கு மேலும் 6 மாதம் காலநீட்டிப்பு கோரி இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தெரிவித்தார்.
5-வது காலநீட்டிப்பு
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்பங்களை சந்தித்து இந்தியாவுக்கு வரும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்த சட்டம் வழி வகுக்கிறது. இம்மசோதா, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். அரசிதழில் வெளியிடப்பட்டது. பொதுவாக, ஜனாதிபதி ஒப்புதல் அளித்த சட்டத்துக்கு 6 மாதத்துக்குள் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் அல்லது நாடாளுமன்றத்திடம் காலநீட்டிப்பு பெற வேண்டும்.விதிமுறைகளை வகுக்க மத்திய அரசு ஏற்கனவே 4 தடவை காலநீட்டிப்பு பெற்றுள்ளது. இந்தநிலையில், மேலும் 6 மாதங்கள், அதாவது வருகிற ஜனவரி 9-ந் தேதி வரை காலநீட்டிப்பு அளிக்குமாறு மக்களவை மற்றும் மாநிலங்களவையிடம் கோரியிருப்பதாக மக்களவையில் மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த் ராய் தெரிவித்தார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு
மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு நித்யானந்த் ராய் அளித்த பதில் வருமாறு:-

2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக, இந்த கணக்கெடுப்பு மறுஉத்தரவு வரும் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.மக்கள்தொகை கணக்கெடுப்பில் கல்வி, எஸ்.சி., எஸ்.டி., மதம், மொழி, திருமணம், கர்ப்பம், உடல் குறைபாடு, வேலை, இடம்பெயர்ந்தது போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில்

மற்றொரு கேள்விக்கு நித்யானந்த் ராய் கூறியதாவது:-
தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தை எவ்வளவு காலஇடைவெளியில் நடத்த வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்படவில்லை. கடைசியாக, 2013-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி இக்கூட்டம் நடந்தது. இருப்பினும், தேசிய ஒருமைப்பாடு விவகாரங்களை மத்திய அரசு அவ்வப்போது விவாதித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பனாமா ஆவண வழக்கு
பனாமா தீவில் உள்ள மொசாக் பொன்சேகா என்ற சட்ட நிறுவனத்தின் உதவியுடன் இந்தியர்கள் உள்பட பல நாட்டினர் சட்டவிரோத பண பரிமாற்றம், வரிஏய்ப்பு, பணம் குவிப்பு போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். அந்த நிறுவனத்தின் ஆவணங்கள் கசிந்ததன் மூலம் இந்த விவகாரம் தெரிய வந்தது.இதில், இந்தியர்கள் தொடர்புடைய ரூ.20 ஆயிரத்து 78 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். இதுதொடர்பாக 46 புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

தனியார் ஆஸ்பத்திரிகள் தடுப்பூசி கொள்முதல்
கடந்த 3 ஆண்டுகளில் பத்திரிகை, தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் ஆகிய ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிட மத்திய அரசுக்கு ஏற்பட்ட செலவினம் கணிசமாக குறைந்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.கடந்த மே மாதம், தனியார் ஆஸ்பத்திரிகள் 1 கோடியே 27 லட்சத்து 34 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவீண் பவார் மாநிலங்களவையில் கூறினார்.