கர்நாடகத்தில் பா.ஜனதா இதுவரை சொந்த பலத்தில் ஆட்சியை பிடித்ததா? சித்தராமையா கேள்வி


கர்நாடகத்தில் பா.ஜனதா இதுவரை சொந்த பலத்தில் ஆட்சியை பிடித்ததா? சித்தராமையா கேள்வி
x

கர்நாடகத்தில் பா.ஜனதா இதுவரை சொந்த பலத்தில் ஆட்சியை பிடித்துள்ளதா? என்று சித்தராமையா கேள்வி கேட்டுள்ளார்.

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஜனநாயகம் இல்லை
எடியூரப்பாவை பதவி நீக்கம் செய்ய பா.ஜனதா மேலிடம் முடிவு செய்த பிறகு, அவரை இன்னும் சில மாதங்கள் பதவியில் நீட்டித்து இருக்க வேண்டும். ஏனென்றால், மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை யார் வழங்குவது?. அரசே இல்லாத நிலையில் மக்களை காப்பாற்றுவது யார்?.

பா.ஜனதாவினருக்கு மக்களின் நலன்களைவிட ஆட்சி அதிகாரத்தை மாற்றி கொடுப்பதே முக்கியமாகிவிட்டது. பா.ஜனதாவில் ஜனநாயகம் இல்லை. புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதா மேலிடம் வழங்காது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம் இல்லை. கட்சி மேலிடத்தின் முடிவுக்கு தலையாட்டும் பணி மட்டும் எம்.எல்.ஏ.க்களுக்கு உள்ளது.

நிவாரணம் வழங்கவில்லை
தேசிய கட்சி என்பதால் கட்சி மேலிடம் இருப்பது சகஜமானது. ஆனால் பா.ஜனதா மேலிடம் சர்வாதிகாரமாக செயல்படுகிறது. இது சரியல்ல. 100 சித்தராமையா வந்தாலும் கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறுவதை தடுக்க முடியாது என்று எடியூரப்பா ஆணவத்துடன் பேசியுள்ளார். மாநிலத்தில் இதுவரை ஒரு முறையாவது பா.ஜனதா சொந்த பலத்தில் ஆட்சியை பிடித்துள்ளதா?. 

எடியூரப்பா ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி காங்கிரசுக்கு எந்த லாபமும் இல்லை.கர்நாடகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்க வில்லை. இந்த நிலையில் மாநிலத்தில் தற்போது அதிக மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் மக்களின் கஷ்டங்களை தீர்க்க அரசே இல்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story