மராட்டியத்தில் மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 207 ஆக அதிகரிப்பு


மராட்டியத்தில் மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 207 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 27 July 2021 7:24 PM GMT (Updated: 27 July 2021 7:24 PM GMT)

மராட்டியத்தில் கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்து உள்ளது. 29 ஆயிரம் கால்நடைகளும் பலியாகி உள்ளன.

வெள்ளத்தில் மூழ்கிய மாவட்டங்கள்
மராட்டியத்தில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இந்த பேய் மழைக்கு கொங்கன் மற்றும் மேற்கு மராட்டிய பகுதிகள் பலத்த சேதத்தை சந்தித்தன. குறிப்பாக ராய்காட், ரத்னகிரி, கோலாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதேபோல வெள்ளம் பாதித்த பல இடங்களில் தற்போதும் நீர்வடியாமல் உள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீடபு பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.இதற்கிடையே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, துணை முதல்-மந்திரி அஜித்பவார் ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

207 பேர் பலி
இந்தநிலையில் மராட்டியத்தில் பெய்த கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்து உள்ளது. இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது்-

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்து உள்ள சையாத்ரி சிகரத்தில் பெய்த தொடர் மழையால் தான் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதன் காரணமாக சத்தாரா, சாங்கிலி, கோலாப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆற்றாங்கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மாற்றியது. இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்து 178 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க 
வைக்கப்பட்டுள்ளனர். சாங்கிலியில் மட்டும் 2 லட்சத்து 6 ஆயிரத்து 619 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சாங்கிலியில் பலத்த மழை பெய்யாத போதும், சத்தாராவில் உள்ள கொய்னா அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரால் சாங்கிலியிலும் பல கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மக்களுக்காக கோலாப்பூரில் 253 முகாம்களும், ரத்னகிரியில் 6 முகாம் அமைக்கப்பட்டுள்ளன.

29 ஆயிரம் கால்நடைகள்
மாநிலத்தில் இதுவரை மழைக்கு 207 பேர் உயிரிழந்து உள்ளனர். அதிகபட்சமாக ராய்காட்டில் 95 பேர் பலியாகி உள்ளனர். இதேபோல சத்தாராவில் 45 பேரும், ரத்னகிரியில் 35 பேரும், தானேயில் 12 பேரும், கோலாப்பூரில் 7 பேரும், மும்பையில் 4 பேரும், புனேயில் 3 பேரும், சிந்துதுர்க், வார்தாவில் தலா 2 பேரும் உயிரிழந்து உள்ளனர். 11 பேர் மாயமாகி உள்ளனர். 51 பேர் காயமடைந்து இருந்தனர். 

பெரும்பாலான உயிரிழப்புகள் ராய்காட், சத்தாராவில் நடந்த நிலச்சரிவுக்கு தான் ஏற்பட்டுள்ளன. கோலாப்பூர், சாங்கிலியில் மக்கள் வெள்ளத்திற்கு உயிரிழந்து உள்ளனர். கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் மாநிலத்தில் 294 பேர் மழைக்கு உயிரிழந்து உள்ளனர்.இதேபோல மாநிலத்தில் 29 ஆயிரத்து 100 கால்நடைகள் மழைக்கு பலியாகி உள்ளன. சாங்கிலி, கோலாப்பூர், சத்தாரா, சிந்துதுர்க் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் செத்து உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story