பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மராட்டியத்திலும் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்: நானா படோலே


பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மராட்டியத்திலும் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்: நானா படோலே
x
தினத்தந்தி 27 July 2021 8:01 PM GMT (Updated: 27 July 2021 8:01 PM GMT)

பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க மராட்டியத்திலும் விசாரணை கமிஷனை அமைக்க வேண்டும் என நானா படோலே வலியுறுத்தி உள்ளார்.

விசாரணை கமிஷன்
இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்க இலக்கு வைக்கப்பட்டு இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. இந்தவிவகாரம் குறித்து மேற்கு வங்காள மாநிலத்தில் விசாரணை நடத்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நீதிபதிகள் குழுவை அமைத்து உள்ளார். இதேபோல பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்த மராட்டிய அரசு கமிஷனை அமைக்கவேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே வலியுறுத்தி உள்ளார்.

2017 ஒட்டுகேட்புடன் தொடர்பு?
இதுகுறித்து அவர் கூறுகையில், "பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை. எனவே மேற்கு வங்காள மாநிலம் போல, மராட்டிய அரசும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷனை அமைக்க வேண்டும். தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் 2017-ம் ஆண்டு அம்ஜாத் கான் என்ற போதை பொருள் கடத்தல்காரன் பெயரில் எனது செல்போன் ஒட்டுகேட்கப்பட்டது. இந்த விவகாரம் மாநில சட்டசபையில் எழுப்பப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

2017-ம் ஆண்டு போன் ஒட்டுகேட்கப்பட்ட சம்பவத்திற்கும், பெகசாஸ் மென்பொருளுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை கண்டுபிடிக்க வேண்டிய தேவை உள்ளது. இது அதே மென்பொருள் தான் மாநிலத்திலும் பயன்படுத்தப்பட்டதா, யார் அதை வாங்கினார்கள் உள்ளிட்ட பல விஷயங்களை தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்" என்றார்.

Next Story