தேசிய செய்திகள்

வங்கிகளில், உரிமை கோரப்படாத பணம் ரூ.24,356 கோடி: மத்திய அரசு + "||" + Nearly 24,000 cr lying unclaimed with banks: Central Govt

வங்கிகளில், உரிமை கோரப்படாத பணம் ரூ.24,356 கோடி: மத்திய அரசு

வங்கிகளில், உரிமை கோரப்படாத பணம் ரூ.24,356 கோடி: மத்திய அரசு
வங்கிகளில், உரிமை கோரப்படாத ரூ.24 ஆயிரத்து 356 கோடி டெபாசிட் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய அரசின் வேலை
அசாம்-மிசோரம் இடையே எல்லை பிரச்சினை வெடித்துள்ள நிலையில், மக்களவையில் மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த் ராய் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மாநிலங்களுக்கு இடையிலான எல்லை பிரச்சினைக்கு அந்தந்த மாநிலங்களின் பரஸ்பர ஒத்துழைப்புடன்தான் தீர்வு காண முடியும் என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு. இதில் சுமுக தீர்வு காண ஏற்பாடு செய்யும் வேலையை மட்டுமே மத்திய அரசு செய்யும்.தற்போது, மாநிலங்களுக்கிடையே 7 எல்லைகளில் பிரச்சினை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்காணிப்பு கேமராக்கள்

மக்களவையில் ஒரு கேள்விக்கு நித்யானந்த் ராய் அளித்த பதில் வருமாறு:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, மத்திய விசாரணை அமைப்புகளின் அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோல், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உரிமை கோராத பணம்

மாநிலங்களவையில், கேள்வி நேரத்தின்போது மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி பகவத் காரத் அளித்த பதிலில் கூறியதாவது:-

கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, நாட்டில் உள்ள அனைத்து வர்த்தக வங்கிகளில், உரிமை கோரப்படாத ரூ.24 ஆயிரத்து 356 கோடி இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது, முந்தைய ஆண்டை விட ரூ.5 ஆயிரத்து 977 கோடி அதிகம் ஆகும்.அந்த கணக்குகளின் உரிமையாளர்கள் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மின் வினியோகம்

மாநிலங்களவையில் மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே.சிங் ஒரு கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:-

கடந்த மே மாதம் கிராமப்புற பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சராசரி மின்வினியோகம் 22.17 மணி நேரமாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம், நகர்ப்பகுதிகளில் சராசரி மின்வினியோகம் 23.36 மணி நேரமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

இடைவெளி அதிகரிப்பு ஏன்?

மாநிலங்களவையில், மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவீண் பவார் கூறியதாவது:-

கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக நீட்டிப்பதற்கு தேசிய நிபுணர் குழு சிபாரிசு செய்தது. அதை சுகாதார அமைச்சகமும் ஏற்றுக்கொண்டது.இங்கிலாந்து, உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் ஆகியவை மூலம் பெறப்பட்ட விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் அடிப்படையில், ஒளிவுமறைவின்றி, இந்த இடைவெளி அதிகரிக்கப்பட்டது. நிபுணர் குழுவில் எந்த உறுப்பினரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.