கர்நாடகாவில் ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல்: நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் கைது


கர்நாடகாவில் ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல்:  நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 July 2021 12:46 AM GMT (Updated: 28 July 2021 12:46 AM GMT)

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் தங்கியிருந்த நைஜீரியாவை சேர்ந்த 2 பேரிடம் இருந்து ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.




பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் நைஜீரியா நாட்டை சேர்ந்த இருவர் வெவ்வேறு பகுதிகளில் தங்கியிருந்து உள்ளனர்.  அவர்களது வீடுகளில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிகாலை திடீர் சோதனை நடத்தி, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு ஹொரமாவு அருகிலுள்ள கல்கரே பகுதியில், வெளிநாட்டினர் போதைப்பொருட்கள் விற்பனை செய்கின்றனர் என மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நேற்று அதிகாலை சம்பவ பகுதிக்கு சென்ற போலீசார், வெளிநாட்டினர் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

இதன்பின் வீட்டுக்குள் நுழைந்து, நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவரும், கேரளாவை சேர்ந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள், போதை மாத்திரைகள், ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோன்று, எலஹங்கா அருகே மற்றொரு நைஜீரிய நபரிடம் சோதனை நடத்தப்பட்டது. அதில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  விசா காலம் முடிந்தும் சட்ட விரோதமாக இந்தியாவில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.  நைஜீரிய நாட்டினரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story