“பா.ஜ.க. வலுவான கட்சி; எதிர்ப்பும் வலுவாக இருக்கும்” - மம்தா பானர்ஜி


“பா.ஜ.க. வலுவான கட்சி; எதிர்ப்பும் வலுவாக இருக்கும்” - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 28 July 2021 12:38 PM GMT (Updated: 28 July 2021 12:39 PM GMT)

மேற்கு வங்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.

புதுடெல்லி, 

மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்றைய தினம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக பிரதமரை சந்தித்ததாகவும், இந்த சந்திப்பின்போது பிரதமரிடம் மாநிலத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்குவது மற்றும் மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசியதாகவும் செய்தியாளர்களிடம் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் வைத்து மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் உடன் இருந்தார். 

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, இது மிகவும் நேர்மறையான சந்திப்பாக அமைந்தது என்று குறிப்பிட்டார். பொதுவான அரசியல் விவகாரங்கள் குறித்தும், பெகாசஸ் உளவு விவகாரம் மற்றும் கொரோனா சூழல் குறித்தும் பேசப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2024 மக்களவை தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து விவாதிக்க இந்த சந்திப்பு நிகழ்ந்ததா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “பாஜக வலுவான கட்சி, எதிர்ப்பும் வலுவாக இருக்கும். எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து வரலாறு படைக்கும் என்பது எங்கள் நம்பிக்கை” என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார். 

Next Story