கர்நாடகத்தில் 2 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு ஊழலில் சாதனை: சித்தராமையா


கர்நாடகத்தில் 2 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு ஊழலில் சாதனை: சித்தராமையா
x
தினத்தந்தி 29 July 2021 11:19 PM GMT (Updated: 29 July 2021 11:19 PM GMT)

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு கடந்த 2 ஆண்டுகளில் ஊழலில் சாதனை படைத்துள்ளதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பா.ஜனதா அரசின் 2 ஆண்டு ஊழல்கள் என்ற பெயரில் கையேடு ஒன்றை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊழல் புகார்கள்
கர்நாடகத்தில் ஊழல் மற்றும் கருப்பு பணத்தால் அமைந்தது தான் இந்த பா.ஜனதா அரசு. இந்த 2 ஆண்டுகளில் ஊழல் செய்தது, தவறான ஆட்சி நிர்வாகத்தை நடத்தியது போன்றவை தான் எடியூரப்பாவின் சாதனை. எடியூரப்பா பதவி விலகிய 3 நாட்களுக்கு முன்பு ஏழை குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது.பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களே, தங்கள் கட்சி ஆட்சியின் மீது ஊழல் புகார்களை கூறுகிறார்கள். சில மந்திரிகளின் ஊழல்கள் குறித்து அந்த துறை ஊழியர்களே எனக்கு கடிதம் எழுதுகிறார்கள். இந்த ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்க 
முதல்-மந்திரியை மாற்றின் அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்திவிடலாம் என்று பா.ஜனதா மேலிடம் கருதுவது போல் தெரிகிறது.

முட்டை கொள்முதலில் ஊழல்
பா.ஜனதாவின் இந்த நாடகம் மக்களுக்கு நன்றாக தெரிந்துவிட்டது. பல மந்திரிகள் கோர்ட்டுக்கு சென்று தடை ஆணை பெற்று வந்து தங்களின் மானத்தை காப்பாற்றிக் கொண்டதாக நினைக்கிறார்கள். விண்ணை தொட்ட ஊழல் மற்றும் கொரோனா காலத்தில் இறந்த பிணங்களை இறுதிச் சடங்கு செய்வதிலும் ஊழல் செய்துள்ளனர். இது தான் பா.ஜனதா அரசின் 2 ஆண்டு கால சாதனை.இதற்கு முன்பு கனிம வளங்கள் முறைகேடு நடந்தது. நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை விவசாயிகளுக்கு எதிராக செயல்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குறுகிய கால திட்ட 
பணிகளுக்கு டெண்டர் விடும் முன்பே 10 சதவீத கமிஷன் பெறுகிறார்கள். கொரோனா 3-வது அலை குழந்தைகளை தாக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நேரத்தில் ஏழை குழந்தைகளுக்கு வழங்க மேற்கொள்ளப்பட்ட முட்டை கொள்முதலில் ஊழல் செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு ஊழலில் சாதனை படைத்துள்ளது.

விலைவாசி உயர்ந்துவிட்டது
ஆக்சிஜன் கிடைக்காமல் சாம்ராஜ்நகர், பெங்களூரு, கலபுரகி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கொரோனா நோயாளிகள் மரணம் அடைந்தனர். ஆனால் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு, ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் யாரும் இறக்கவில்லை என்று சொல்கிறது. மத்திய அரசு உயிர் காக்கும் வென்டிலேட்டர் கருவிகளை வாங்கி மாநிலங்களுக்கு வழங்கியது. இதில் கர்நாடகத்திற்கு வழங்கப்பட்ட வென்டிலேட்டர்களில் 606 கருவிகள், தரம் குறைந்தவை உள்ளதால் அவற்றை குடோன்களில் போட்டு வைத்துள்ளனர்.கொரோனா பரவல் என்பது ஒரு இயற்கை பேரிடராக இருக்கலராம். ஆனால் அதை பா.ஜனதா அரசுகள் சரியான முறையில் கையாளவில்லை. கொரோனாவால் இதுவரை 36 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக அரசு சொல்கிறது. ஆனால் உண்மையில் இதை விட 10 மடங்கு அதிகமானவர்கள் இறந்திருக்க கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. விலைவாசி உயர்ந்துவிட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துவிட்டன. சிமெண்டு உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. இதனால் சாமானிய மக்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.

2 லட்சம் பேருக்கு வேலை
வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டது. கொரோனா பரவலால் ஏராளமான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் இருந்த வேலைகளும் பறிபோய் விட்டன. இதனால் படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். கர்நாடகத்தில் முன்பு காங்கிரஸ் ஆட்சியில் 2 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கினோம். மக்களின் பசியை போக்க நாங்கள் இந்திரா உணவகங்களை தொடங்கினோம். ஆனால் பா.ஜனதா அரசு அதற்கு உரிய நிதி ஒதுக்கவில்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story