திருப்பதியில் சர்வதேச போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி; 6 பேர் கைது


திருப்பதியில் சர்வதேச போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி; 6 பேர் கைது
x
தினத்தந்தி 30 July 2021 12:28 AM GMT (Updated: 30 July 2021 12:28 AM GMT)

திருப்பதியில் சர்வதேச போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசில் புகார்
திருப்பதியைச் சேர்ந்த ஒரு கும்பல் லீலா மகால் சர்க்கிள் அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி திருப்பதியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும், பல்வேறு நாடுகளில் இருந்து திருப்பதிக்கும் வந்த போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்பாக மாற்றி மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அதன் மூலம் இந்திய தொலைத் தொடர்புத்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி விஜயவாடாவைச் சேர்ந்த இந்திய தகவல் தொடர்பு பாதுகாப்பு அமைச்சகத்தின் இயக்குனர் மனோஜ்குமாா் திருப்பதி அலிபிரி போலீசில் ஆன்லைன் மூலமாக புகார் செய்தார்.அதன்பேரில் அலிபிரி போலீசார் சம்பந்தப்பட்ட முகவரிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு 6 பேர் கொண்ட கும்பல் அமர்ந்து வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் முறை மூலம் சர்வதேச போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

கைது
இதையடுத்து 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த கண்ணம் ரவிக்குமார் (வயது 55), திருப்பதியைச் சேர்ந்த அரிகலா ஹரிபிரகாஷ் (28), திருப்பதியில் உள்ள ஒரு தனியார் செல்போன் தகவல் தொடர்பு நிறுவன ஊழியர்களான நீலம் கிரண்குமார் (26), நாராயண பார்த்தசாரதி (27), சீனிவாஸ் (37), மச்சா ஷேசபாணி (26) எனத் தெரிய வந்தது. அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சர்வதேச போன் இணைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றும் 4 கருவிகள், செயல்பாட்டில் உள்ள 116 சிம் கார்டுகள், செயல்படாத 192 
சிம் கார்டுகள், 3 இணைய மோடம்கள், கம்ப்யூட்டர்கள், மடிக்கணினிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், உயர் தொழில் நுட்பத்தின் மூலம் சர்வதேச போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடைமுறையால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். இந்திய தொலைத் தொடர்புத்துறைக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம். அந்தக் கும்பல் சொந்த ஆதாயத்துக்காக இதுபோல் செய்தார்களா, பணம் பறிக்கும் நோக்கத்தில் ஈடுபட்டார்களா, சர்வதேச தீவிரவாத கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த உள்ளோம், என்றனர்.

Next Story