மாநிலங்களவையில் விசில் சப்தம்... எதற்கும் ஒரு எல்லை உண்டு... வெங்கய்யா நாயுடு கோபம்


மாநிலங்களவையில் விசில் சப்தம்... எதற்கும் ஒரு எல்லை உண்டு... வெங்கய்யா நாயுடு கோபம்
x
தினத்தந்தி 30 July 2021 9:08 AM GMT (Updated: 2021-07-30T14:38:11+05:30)

பெகாசஸ் உளவு விவகாரத்தால் அவையில் அமளி ஏற்பட்டபோது, எதற்கும் ஒரு எல்லை உண்டு என மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு எச்சரித்தார்.

புதுடெல்லி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. ஆனால் பெகாசஸ், வேளாண் சட்டங்கள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளையும் முடக்கி வருகின்றனர். 

இதில் நேற்று முன்தினம் மக்களவையில் விரும்பத்தகாத செயல்களும் அரங்கேறின. குறிப்பாக காங்கிரசை சேர்ந்த குர்ஜீத் அஜாலா, பிரதாபன், ஹிபி ஈடன் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை அலுவல் குறிப்புகள் அடங்கிய காகிதங்கள் மற்றும் கோஷங்கள் எழுதி வந்த அட்டைகளை கிழித்து சபாநாயகர் இருக்கையை நோக்கி வீசினர்.இதைப்போல ஆளுங்கட்சி எம்.பி.க்கள் இருந்த பகுதியை நோக்கியும் அவர்கள் வீசினார்கள். இதனால் அவையில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. எனவே அவை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் காகிதத்தை கிழித்து வீசியதற்கு வேதனை தெரி்வித்த சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற பாரம்பரியத்துக்கு ஒவ்வாத செயல்கள் மீண்டும் அரங்கேறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இன்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உளவுபார்ப்பதை நிறுத்து என எழுதப்பட்ட பதாகைகளுடன் அமளியில் ஈடுபட்டனர். அப்போது விசில் சத்தம் எழுந்ததை கவனித்த அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, அவையில் கண்ணியம் காக்குமாறு குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல மக்களவையிலும் அடுத்தடுத்து அமளி ஏற்பட்டு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Next Story