‘பெகாசஸ்’ உளவு விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரியிடம் இப்போதும் விளக்கம் கேட்கலாம்; எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு


‘பெகாசஸ்’ உளவு விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரியிடம் இப்போதும் விளக்கம் கேட்கலாம்; எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
x
தினத்தந்தி 30 July 2021 10:57 PM GMT (Updated: 2021-07-31T04:27:37+05:30)

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் எதிர்க்கட்சிகள் இப்போதும் விளக்கம் கேட்கலாம் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கூறினார்.

இப்போதும் கேட்கலாம்
‘பெகாசஸ்’ உளவு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நேற்று நாடாளுமன்ற மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து, நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-
பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இரு அவைகளிலும் அறிக்கை தாக்கல் செய்தார். அவர் அறிக்கை தாக்கல் செய்தவுடன், தங்களது கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை அப்போதே ஏற்றுக்கொண்டோம்.அதை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் இப்போதும் அஸ்வினி வைஷ்ணவிடம் விளக்கம் கேட்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனுராக் தாக்குர்

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எல்லா பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறிவிட்டார். மக்களுக்கு தொடர்புடைய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப வேண்டும். அவற்றுக்கு பதில் அளிப்போம்.அதை விடுத்து, அமளியில் ஈடுபடுவதும், காகிதங்களை கிழித்து சபாநாயகர் மற்றும் மத்திய மந்திரிகளை நோக்கி வீசுவதும் துரதிருஷ்டவசமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story