அசாமில் புதிதாக பதவியேற்றுள்ள பா.ஜனதா ஆட்சியில் எல்லை மோதல்கள் அதிகரிப்பு; மோடிக்கு, மேகாலயா எம்.பி. கடிதம்


அசாமில் புதிதாக பதவியேற்றுள்ள பா.ஜனதா ஆட்சியில் எல்லை மோதல்கள் அதிகரிப்பு; மோடிக்கு, மேகாலயா எம்.பி. கடிதம்
x
தினத்தந்தி 30 July 2021 11:19 PM GMT (Updated: 30 July 2021 11:19 PM GMT)

அசாமில் புதிதாக பதவியேற்றுள்ள பா.ஜனதா ஆட்சியில் எல்லை மோதல்கள் தீவிரமடைந்து இருப்பதாகவும், இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காணுமாறும் பிரதமர் மோடிக்கு மேகாலயாவை சேர்ந்த எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

6 போலீஸ்காரர்கள் சாவு
அசாம்-மிசோரம் எல்லை பிரச்சினை சமீப காலமாக தீவிரமாக விஸ்வரூபமெடுத்து வருகிறது. அங்கு இருமாநிலத்தவர் இடையே சமீபத்தில் நடந்த மோதலில் அசாமை சேர்ந்த 6 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். இரு தரப்பிலும் ஏராளமானோர் காயமடைந்தனர்.இந்த மோதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோதல் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த எல்லை பிரச்சினையில் தலையிட்டு விரைவில் தீர்வு காணுமாறு பிரதமர் மோடிக்கு மேகாலயா மாநிலத்தை சேர்ந்த வின்சென்ட் எச்.பாலா என்ற எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நீண்ட கால பிரச்சினை
திரிபுரா மற்றும் மணிப்பூரை தவிர பிற வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் அசாமுடன் நீண்ட காலமாக எல்லை பிரச்சினையை கொண்டிருக்கின்றன. இது பல ஆண்டுகளாக நிலம், வன வளங்கள் மற்றும் இன மோதல்கள் தொடர்பான சண்டையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிராந்தியத்தில் நிலவும் அமைதி மற்றும் நிலைத்தன்மை பாதிப்பை, சமீபத்திய அசாம்-மிசோரம் எல்லை மோதல் 
வெளிப்படுத்தி இருக்கிறது. மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளில் ஆத்திரமூட்டல் மற்றும் ஆக்ரோஷமான நடவடிக்கைகள் ஆரோக்கியமான அண்டை உறவுகளுக்கு ஆபத்தானது.

தற்போதைய பா.ஜனதா அரசு
அசாமின் தற்போதைய பா.ஜனதா தலைமையிலான அரசுக்கு நன்கு தெரிந்த காரணங்களுக்காக, இத்தகைய மோதல்கள் அதிகரித்து வருவது மட்டுமின்றி, மிகவும் தீவிரமான திருப்பத்தையும் எடுத்துள்ளன.அந்தவகையில் தற்போதைய பா.ஜனதா ஆட்சியில் எல்லை மோதல்கள் அதிகரித்து இருக்கின்றன. எனவே அண்டை மாநிலங்களுடன் இணக்கமான உறவுகளை நிறுவுவதற்காக இந்த பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட்டு விரைவில் தீர்வு காண வேண்டும்.

முன்னேற்றத்துக்கான போராட்டம்
சிறந்த முன்னேற்றத்தை அடைவதற்காக இந்த பிராந்தியம் நீண்ட காலமாக போராடிக்கொண்டிருக்கிறது. அது பாதிக்கப்படுவது மிகவும் வருந்தத்தக்க விஷயம் ஆகும். இவ்வாறு வின்சென்ட் எச்.பாலா தனது கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே வின்சென்ட் எச்.பாலாவை பொதுச்செயலாளராக கொண்டுள்ள வடகிழக்கு எம்.பி.க்கள் மன்றம், அசாம்-மிசோரம் எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான சமரச நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இரு மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டு உள்ளது.


Next Story