பெகாசஸ் ஒட்டுக்கேட்பில் விசாரணை ஆணையம் அமைத்தது, மம்தா பானர்ஜியின் தைரியமான நடவடிக்கை: சிவசேனா


பெகாசஸ் ஒட்டுக்கேட்பில் விசாரணை ஆணையம் அமைத்தது, மம்தா பானர்ஜியின் தைரியமான நடவடிக்கை: சிவசேனா
x
தினத்தந்தி 31 July 2021 12:26 AM GMT (Updated: 2021-07-31T05:56:47+05:30)

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விசாரணை ஆணையம் அமைத்தது மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் தைரியமான நடவடிக்கை என்று சிவசேனா பாராட்டு தெரிவித்துள்ளது.

விசாரணை ஆணையம்
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் மூலம், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், மிக உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்களை மத்திய அரசு ஒட்டுக்கேட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்தநிலையில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்துள்ளார். இதற்காக மேற்கு வங்க முதல்-மந்திரியை சிவசேனா பாராட்டியுள்ளது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறி இருப்பதாவது:-

தைரியம்
சி.பி.ஐ. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றின் மற்றொரு கிளையாக நாட்டு மக்கள் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தை பார்க்கிறார்கள். முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் இந்த நடவடிக்கை தைரியமானது. அவர் ஒரு நீதி விசாரணை ஆணையத்தை அமைத்து உளவு பார்க்கப்பட்டது தொடர்பான விசாரணையை தொடங்கி உள்ளார். மத்திய அரசு செய்யவேண்டிய காரியத்தை அவர் செய்திருக்கிறார்.மாநில முதல்-மந்திரி ஒருவர் தனது மாநில குடிமக்களின் உரிமைகள் மற்றும் சட்ட உரிமைகளை பாதுகாக்க வேண்டும். அதன்படி முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அனைவரையும் 
எழுப்பும் வேலையை செய்துள்ளார். இந்த விசாரணை ஆணையத்தை அமைத்ததன் மூலம் அவர் மத்திய அரசுக்கு அதிர்ச்சியை வழங்கியுள்ளார். பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்து பிரான்ஸ் அரசு விசாரணையை தொடங்கியுள்ளது. பிரான்ஸ் அரசால் இதுகுறித்து விசாரணை நடத்த முடிந்த நிலையில், அதை ஏன் இந்திய அரசு செய்யவில்லை?.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story