3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் பலியானது பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை; எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்


3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் பலியானது பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை; எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 July 2021 2:44 AM GMT (Updated: 2021-07-31T08:14:41+05:30)

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்து வருகிற போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் இறப்பு விவரங்களை அறிய நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

விவசாயிகள் பலி
மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் தங்கள் நலன்களுக்கு எதிரானவை, குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை ஒழித்து விடும், சந்தை அமைப்புகள் முடிவுக்கு வரும், தங்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையேந்த வைத்து விடும் என்று விவசாயிகள் கருதுகின்றனர். இந்த சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு கடந்த நவம்பர் மாதம் முதல் தொடர் போராட்டங்களை அவர்கள் நடத்துகின்றனர்.இந்த போராட்டத்தின்போது பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த விவசாயிகள் இறப்பு பற்றி மத்திய அரசுக்கு எதுவும் தெரியாது என்று மத்திய விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர், நாடாளுமன்றத்தில் கூறினார். இது விவசாயிகளின் உணர்வுகளை காயப்படுத்தி உள்ளது. இதில் விவசாயிகளை புண்படுத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை
இந்தநிலையில் டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் இறப்பு குறித்த விவரங்களை அறிய நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்துள்ளன.இதில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவின் தலையீட்டைக் கோரி சிரோமணி அகாலிதளம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மாநாடு, ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர். விவசாயிகள் இறப்பு விவரங்களை அறிய நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

‘மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும்’
மேலும் இந்த விவகாரத்தில் விவசாய மந்திரி நரேந்திரசிங் தோமர் விவசாய சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரி உள்ளனர். இந்த கடிதத்தில் சிரோமணி அகாலிதளம் கட்சித்தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரியா சுலே, சிவசனோவின் அரவிந்த் சவந்த், பகுஜன் சமாஜ் கட்சியின் தனிஷ் அலி, ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் கட்சியின் அனுமான் பெனிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பி.ஆர். நடராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் எம்.செல்வராஜ், தேசியமாநாட்டு கட்சியின் ஹஸ்னயின் மசூதி உள்ளிட்டோர் கையெழுத்து போட்டுள்ளனர்.

Next Story