எல்லையில் பதற்றத்தை குறைக்க அசாம் - நாகாலாந்து இடையே ஒப்பந்தம்


எல்லையில் பதற்றத்தை குறைக்க அசாம் - நாகாலாந்து இடையே ஒப்பந்தம்
x
தினத்தந்தி 31 July 2021 10:56 PM GMT (Updated: 31 July 2021 10:56 PM GMT)

நாகாலந்து மாநில எல்லையில் பதற்றத்தை குறைக்க அம்மாநிலத்துடன் அசாம் ஒப்பந்தம் செய்துள்ளது.

கவுகாத்தி,

வடகிழக்கு மாநிலங்களிடையே எல்லைப் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அசாம் - மிசோரம் எல்லையில் சமீபத்தில் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் அசாம் போலீசார் ஆறு பேர் பலியாயினர்.

'மிசோரமுக்கு யாரும் செல்ல வேண்டாம்' என அசாம் மக்களை அம்மாநில முதல்-மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான, ஹிமாந்த பிஸ்வா சர்மா கூறினார். இதற்கு மிசோரம் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அசாம் - நாகாலாந்து எல்லையில் பதற்றத்தை குறைக்கும் வகையில் இரு மாநிலங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு மாநில தலைமை செயலர்களும் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தில், எல்லையிலிருந்து போலீசாரை விலக்கிக் கொள்ள இரு மாநில அரசுகளும் சம்மதித்து உள்ளன என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அசாம் - மிசோரம் இடையே நடந்த எல்லை மோதல் தொடர்பாக, அசாம் முதல்-மந்திரி மற்றும் ஆறு அதிகாரிகள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் மிசோரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 

இது குறித்து அசாம் முதல்-மந்திரி சர்மா கூறுகையில், எல்லை மோதல் தொடர்பான விசாரணைக்கு நான் தயார். ஆனால் இந்த விசாரணையை, சி.பி.ஐ., போன்ற பொது அமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Next Story