மராட்டிய முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 31 July 2021 11:36 PM GMT (Updated: 2021-08-01T05:06:01+05:30)

மாமூல் வழக்கில் மராட்டிய முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

மும்பை,

மாதம் ரூ.100 கோடி மாமூல் கேட்டு மும்பை போலீசாரை கட்டாயப்படுத்தியது உள்ளிட்ட ஊழல் புகாரை சி.பி.ஐ. விசாரிக்க மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து, உள்துறை மந்திரி பதவி வகித்த அனில் தேஷ்முக் ராஜினாமா செய்ய நேர்ந்தது. அவர் மீதான சி.பி.ஐ. நடத்தி வரும் விசாரணையின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. குறிப்பாக ரூ.4.7 கோடியை அனில் தேஷ்முக்கிற்கு மாமூல் வழங்கியதாக சில ஓட்டல், பார் உரிமையாளர்கள் அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இதனால் அனில் தேஷ்முக் மீதான பிடி இறுதியதை தொடர்ந்து, அவரது உதவியாளர்கள் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அனில் தேஷ்முக்கிற்கும் 3 முறை அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. அதேவேளையில் அமலாக்கத்துறை வழக்கை எதிர்த்து அனில் தேஷ்முக் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு நிவாரணம் வழங்க மறுத்து விட்டது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை மீண்டும் அனில் தேஷ்முக்கிற்கு சம்மன் அனுப்பி உள்ளது. அதில் நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பொறுத்து அமலாக்கத்துறையில் ஆஜராக இருப்பதாக அனில் தேஷ்முக் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நிவாரணம் வழங்காத நிலையில், அமலாக்கத்துறை 4-வது முறையாக அனுப்பிய சம்மனை ஏற்று அவர் ஆஜராவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story