ஜம்மு-காஷ்மீர்: 15 இடங்களில் என்ஐஏ நடத்திய சோதனையில் பயங்கரவாதி ஒருவர் கைது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 Aug 2021 12:04 AM GMT (Updated: 2021-08-01T05:34:45+05:30)

ஜம்மு-காஷ்மீரில் 15 இடங்களில் என்ஐஏ நடத்திய சோதனையில், பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீநகர், 

ஜம்மு-காஷ்மீரில் காவல் துறையினா் மற்றும் சிஆா்பிஎஃப் படைப் பிரிவினருடன் இணைந்து 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று நடத்திய தீவிர சோதனையில், லஷ்கா்-ஏ-முஸ்தபா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவா் கைது செய்யப்பட்டார். 

முன்னதாக சோபியான் மாவட்டத்தில் 9 இடங்களிலும், அனந்த்நாக் மற்றும் ஜம்மு மாவட்டங்களிலும் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது அனந்த்நாக்கின் படின்கூ பகுதியில் பதுங்கியிருந்த இா்பான் அகமது தார் என்ற லஷ்கா்-ஏ-முஸ்தபா பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட சில பயங்கரவாதிகளுடன் இணைந்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

பாகிஸ்தானிலிருந்து லஷ்கா்-ஏ-முஸ்தஃபா பயங்கரவாத அமைப்பு மூலமாக கடந்த மார்ச் மாதம் ஜம்மு விமானப் படைத் தளத்தின் மீது ஆளில்லா சிறிய விமானம் (ட்ரோன்) மூலமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கு உள்பட 2 பயங்கரவாத தாக்குதல் வழக்குகள் தொடா்பாக ஜம்மு-காஷ்மீரில் 15 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இந்தச் சோதனையை மேற்கொண்டனா்.

அந்தப் பயங்கரவாதி பதுங்கியிருந்த இடத்திலிருந்து, செல்போன்கள் உள்ளிட்ட டிஜிட்டல் உபகரணங்கள், தோட்டா குப்பிகள், காவல் துறையினா் மீது கல்வீசி தாக்குதல் நடத்தும்போது பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் முகக் கவசங்கள், கையால் எழுதப்பட்ட ஜிகாதி விவரங்கள், அல்-அக்ஸா ஊடக அடையாள அட்டை, வெடிபொருள்கள் ஆகியவற்றை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினர்.

Next Story