ஆர்ஜித சேவை டிக்ெகட்டில் மோசடி: திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 6 பேரின் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்ய உத்தரவு


ஆர்ஜித சேவை டிக்ெகட்டில் மோசடி: திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 6 பேரின் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்ய உத்தரவு
x
தினத்தந்தி 1 Aug 2021 12:22 AM GMT (Updated: 2021-08-01T05:52:43+05:30)

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டில் மோசடி செய்து, பணிநீக்கம் செய்யப்பட்ட 6 ஊழியர்களின் ஓய்வூதியத்தில் இருந்து 10 சதவீத தொகையை பிடித்தம் செய்ய அரசு, தேவஸ்தானத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆர்ஜித சேவை டிக்ெகட்டில் மோசடி
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் சூப்பிரண்டாகப் பணியாற்றி வந்தவர் சூரியநாராயணரெட்டி, ஊழியராகப் பணியாற்றியவர்கள் சூடவரம் மதுசூதன், ஹேமாத்ரி ரெட்டி, முதுநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்தவர் பாலகிருஷ்ணா, இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தவர் நாராயணராஜு, உதவியாளராகப் பணியாற்றி வந்தவர் சீனிவாஸ். மேற்கண்டவர்கள் உள்பட 21 ஊழியர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2006-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரை ஆர்ஜித சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதற்காக, சம்பந்தப்பட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுக்கான கட்டணத்தை விட கூடுதலாக, தபால் மூலம் பக்தர்களிடம் இருந்து வங்கி வரைவோலையாக பெற்று மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. ஆனால் பக்தர்கள் 2030-ம் ஆண்டு வரை ஏழுமலையான் கோவிலில் நடக்கும் ஆர்ஜித சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய வங்கி வரைவோலையை அனுப்பி வைத்துள்ளனர்.

6 ேபர் பணி நீக்கம்
தேவஸ்தான ஊழியர்கள் செய்த மோசடி விவகாரம் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்ததும், உயர் அதிகாரிகள் மேற்கண்ட ஊழியர்கள் உள்பட 21 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டு வந்தனர். அதில் 15 பேர் மீதான புகாரை நிரூபிக்க முடியாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடைேய, மீதமுள்ள 6 ஊழியர்களும் பணி 
ஓய்வுபெற்றனர். எனினும், அவர்கள் மீதான விசாரணை 12 ஆண்டுகளாக நடந்து வந்தது. அந்த வழக்கு விசாரணை சமீபத்தில் நிறைவடைந்தது.அதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட மேற்கண்ட 6 பேரை பணி நீக்கம் செய்து, அவர்களின் ஓய்வூதியத்தில் 50 சதவீத தொகையை பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டது. அந்தப் பிடித்தம் செய்யப்படும் தொகையை 10 சதவீதமாக குறைக்க வேண்டும், என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அரசுக்கு பரிந்துரை செய்தது. அதை பரிசீலனை செய்த அரசு பணி நீக்கம் செய்யப்பட்ட 6 தேவஸ்தான ஊழியர்களின் ஓய்வூதியத்தில் 10 சதவீத தொகையை வசூலிக்க தேவஸ்தானத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அந்தத் தொகை அவர்களின் ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட உள்ளது.

மேலும் அப்போதைய ஆர்ஜித சேவை அதிகாரியான கோனேட்டி பார்வதி மீது விசாரணை நடத்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

Next Story