மராட்டியத்திலும் பரவிய ஜிகா வைரஸ் பாதிப்பு; அச்சம் வேண்டாம் என அறிவிப்பு


மராட்டியத்திலும் பரவிய ஜிகா வைரஸ் பாதிப்பு; அச்சம் வேண்டாம் என அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Aug 2021 7:28 AM GMT (Updated: 2021-08-01T12:58:44+05:30)

கேரளாவை தொடர்ந்து மராட்டியத்திலும் ஜிகா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது.

புனே,

நாட்டில் கடந்த 2017ம் ஆண்டு முதன்முறையாக குஜராத்தின் ஆமதாபாத் நகரில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.  பகல் பொழுதில் ஏடிஸ் வகை கொசுவால் கடிக்கப்படும் மனிதருக்கு இதன் பாதிப்பு தென்படும்.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பின் 2வது அலையில் இருந்து மீளாத கேரளாவில் ஜிகா வைரசின் பாதிப்பு பரவியது.

இதில், திருவனந்தபுரத்தில் 14 வயது சிறுமி மற்றும் புத்தன்தோப்பு பகுதியில் 24 வயது இளம்பெண் என 2 பேருக்கு நேற்று பாதிப்பு உறுதியான நிலையில் மொத்த  ஜிகா வைரசின் பாதிப்பு எண்ணிக்கை 63 ஆக உயர்ந்தது.

இந்த சூழலில், கேரளாவை தொடர்ந்து மராட்டியத்திலும் ஜிகா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது.  மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள புரந்தர் என்ற பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

அவரின் மாதிரிகளை பரிசோதித்ததில் ஜிகா பாதிப்புடன், சிக்குன்குன்யா வைரசாலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.

எனினும், அவர் முழுமையாக குணமடைந்து விட்டார்.  அதனால் யாரும் அச்சப்பட வேண்டாம் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  ஏடிஸ் வகை கொசுவானது டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் உள்ளிட்ட பிற நோய் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.

இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு அறிகுறி எதுவும் தென்படாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.


Next Story