குற்றவாளி தன் தரப்பு நியாயத்தைக்கூற வாய்ப்பு தருவது சமூகக்கடமை: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி


குற்றவாளி தன் தரப்பு நியாயத்தைக்கூற வாய்ப்பு தருவது சமூகக்கடமை: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி
x
தினத்தந்தி 1 Aug 2021 11:09 PM GMT (Updated: 1 Aug 2021 11:09 PM GMT)

ஒரு கிரிமினல் குற்றவாளி, தன் தரப்பு நியாயத்தைக்கூற வாய்ப்பு தருவது சமூகத்தின் கடமை என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி யு.யு.லலித் கூறினார்.

அனைவரின் கடமை
அரியானா மாநிலம், குருகிராமில் அரியானா சட்டசேவைகள் ஆணையத்தால் ‘அனைவருக்கும் நீதி கிடைப்பதில் சேவைகளின் தரம் முக்கியமானது’ என்ற தலைப்பில் ஓராண்டு கால பிரசார இயக்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரசார இயக்கத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி யு.யு.லலித் நேற்று தொடங்கி வைத்து பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு குற்றவாளி, தான்செய்த குற்றத்துக்காக தண்டிக்கப்பட வேண்டும். இதெல்லாம் உண்மைதான். அதே நேரத்தில், அந்த குற்றவாளி தன்னை தற்காத்துக்கொள்வதற்கு (தன் தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறுவதற்கு) எல்லா வாய்ப்புகளையும் வழங்குவது ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் அனைவரின் கடமையாக அமைந்துள்ளது.

கற்றுத்தந்த கொரோனா காலம்...
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் ஒட்டுமொத்த மனித குலமும் பின்னடைவைச் சந்தித்தது. அந்த நேரத்தில் காணொலி காட்சி தளம், தீர்வுக்கான தளமாக அமைந்தது.எல்லா தொடர்புகளும், அது அரசு அலுவலகங்களாக இருக்கட்டும் அல்லது பிற அமைப்புகளாக இருக்கட்டும், ஏன் பொழுதுபோக்கு மற்றும் பிறவற்றிலும்கூட பெருந்தொற்று நிலைமை அல்லாட வைத்தது. ஆனால் இந்த நிலைமை நம்மை மேம்படுத்திக்கொள்வதற்கும், புதுமைகளை புகுத்துவதற்கும் நமக்குள் உள்ள சிறப்பானவற்றை வெளிப்படுத்துவதற்கும் கற்றுத்தந்தது.

காணொலி காட்சி தளம், தீர்வுக்கான தளமாக செயல்பட முடியும், பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்பதை கொரோனா காலம் எங்களுக்கு கற்றுத்தந்தது. இன்றைக்கு எல்லா கோர்ட்டுகளும் காணொலி காட்சி வழியாக இயங்குகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story