மீண்டும் சுதந்திர போராட்டத்தை நடத்த இளைஞர்கள் காங்கிரசில் சேர வேண்டும்: நானா படோலே


மீண்டும் சுதந்திர போராட்டத்தை நடத்த இளைஞர்கள் காங்கிரசில் சேர வேண்டும்: நானா படோலே
x
தினத்தந்தி 2 Aug 2021 2:11 AM GMT (Updated: 2 Aug 2021 2:11 AM GMT)

மீண்டும் சுதந்திர போராட்டத்தை நடத்த இளைஞர்கள் காங்கிரசில் சேர வேண்டும் என அந்த கட்சியின் மாநில தலைவர் நானா படோலே கூறியுள்ளார்.

சுதந்திர போராட்டம்
மராட்டிய காங்கிரஸ் தலைவர் நானா படோலே நேற்று புனேயில் நடந்த சுதந்திர போராட்ட வீரர் லோக்மான்ய திலகரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

அப்போது அவர் பேசியதாவது:- 

சுதந்திரத்திற்கு முன், திலகர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எழுதினார். எனவே ஆங்கிலேயர்கள் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். தற்போது நாட்டில் அதே சூழல் தான் நிலவிவருகிறது. ஊடக நிறுவனங்கள் மோடி அரசால் குறிவைக்கப்படுகின்றன. மோடி அரசு மக்களின் சுதந்திரத்தை பறித்து வருகிறது. அதே நேரத்தில் பா.ஜனதா கட்சி நாட்டின் சுதந்திரத்திற்காக எந்த பங்களிப்பையும் அளிக்கவில்லை. எனவே நாம் சுதந்திரத்திற்காக மீண்டும் போராட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் காஷ்மீரை சேர்ந்த வாலிபரை சந்தித்தேன். யு.பி.எஸ்.சி. தேர்வு பெற்ற அந்த வாலிபர் அரசு 
பணியை ராஜினாமா செய்துவிட்டதாக கூறினார். முஸ்லிம் என்பதால் அவர் பணியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அதற்கு மத்திய அரசையும் குற்றம்சாட்டினார். எனவே மத்திய அரசுக்கு எதிராக புதிய சுதந்திர போராட்டத்தை நடத்த தேசத்தில் உள்ள இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா அலுவலகம்
இதேபோல, நேரு உலகத்தின் பார்வையில் சமாதானத்தின் தூதர் என தோற்றம் அளிக்க விரும்பியதால் நாடு பெரும் இழப்பை சந்தித்ததாக கூறிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி குறித்து கூறுகையில், ‘‘நேரு நாட்டிற்கு அளித்த பங்களிப்பை பற்றி பேச பல நாட்கள் ஆகும். கவர்னராக பகத்சிங் கோஷ்யாரி அரசியலில் ஈடுபட கூடாது. ஆனால் ராஜ் பவன் பா.ஜனதாவின் தலைமை அலுவலகம் போல மாறிவிட்டது’’ என்றார்.

Next Story