இந்த மாதமே கொரோனா 3 ஆம் அலை துவங்கி விடும்? ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை


இந்த மாதமே கொரோனா 3 ஆம் அலை துவங்கி விடும்? ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 Aug 2021 6:36 AM GMT (Updated: 2 Aug 2021 6:36 AM GMT)

கணித அடிப்படையில் நடத்தப்பட்ட அவர்களது ஆய்வில், 3 ஆவது அலை துவங்கும் போது தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்

இந்த மாதமே கொரோனா 3 ஆம் அலை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், அது வரும் அக்டோபரில் அது உச்சத்தை தொடக்கூடும் என்றும் ஐதராபாத் மற்றும் கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐதராபாத் மற்றும் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) பேராசிரியர்கள் மதுக்குமல்லி வித்யாசாகர் மற்றும் மணீந்திரா அகர்வால் தலைமையிலான ஆய்வுக் குழு இது குறித்த ஆய்வை நடத்தினர்.

கணித அடிப்படையில் நடத்தப்பட்ட அவர்களது ஆய்வில், 3 ஆவது அலை துவங்கும் போது தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் அலையின் உச்சபட்ச தொற்று எண்ணிக்கை ஒன்றரை லட்சம் வரை போகும் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாவது அலையின் போது தினசரி தொற்று 4 லட்சத்தை தாண்டியது போன்ற அளவுக்கு 3 ஆவது அலை தீவிரமாக இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

கொரோனா தொற்று அதிகம் பாதித்த கேரளா மற்றும் மராட்டியம் போன்ற மாநிலங்களில் 3 ஆவது அலையின் போது நிலைமை தலைகீழாக மாறும் எனவும் அவர்கள் கணித்துள்ளனர்.

மே 7 அன்று, இந்தியா 4,14,188 கொரோனா பாதிப்புகளை பதிவு செய்தது, இது இரண்டாவது அலையின் போது அதிக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆகும்.

பத்து மாநிலங்களில்  புதிய தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு இருப்பதாக மத்திய அரசு சமீபத்தில் கூறியது. 10 சதவிகிதத்திற்கும் அதிகமான நேர்மறையான விகிதம் கொண்ட மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை பரிந்துரைத்தது.

பத்து மாநிலங்கள் - கேரளா, மராட்டியம், கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா, அசாம், மிசோரம், மேகாலயா, ஆந்திரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலஙகளாகும்.

Next Story