அசாம் உடனான எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சி -மிசோரம் கவர்னர் தகவல்


அசாம் உடனான  எல்லை  பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சி -மிசோரம் கவர்னர் தகவல்
x
தினத்தந்தி 2 Aug 2021 10:12 AM GMT (Updated: 2 Aug 2021 10:12 AM GMT)

அசாம்-மிசோரம் எல்லை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.

புதுடெல்லி,

அசாம்-மிசோரம் எல்லை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இதில் கடந்த 26-ந்தேதி மிசோரமின் கோலாசிப் மாவட்டத்தில் வைரெங்ட் நகருக்கு அருகே நடந்த பயங்கர மோதலில் அசாமை சேர்ந்த 6 போலீசார் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த மோதலை தொடர்ந்து அங்கு பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. எனவே 5 கம்பெனி துணை ராணுவப்படைகளை மத்திய அரசு அங்கே பணியில் அமர்த்தி இருக்கிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மிசோரம் மற்றும் அசாம் முதல்-மந்திரிகளுடன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இரு மாநில எல்லைகளில் நிலவும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், மிசோரம் கவர்னர் கே ஹரி பாபு இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த  சந்திப்புக்கு பிறகு பேசிய கவர்னர், அசாம் உடனான எல்லைப் பிரச்சினைக்கு தீர்வுகாண மத்திய அரசு முயற்சிப்பதாக தெரிவித்தார். எல்லையில் அமைதி திரும்புவதை உறுதி செய்ய இரு மாநில முதல்வர்களும் அர்ப்பணிப்புடன் உள்ளனர்” என்றார்,. 

Next Story