கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - 6 மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு நிறைவு


கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - 6 மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு நிறைவு
x
தினத்தந்தி 3 Aug 2021 7:25 AM GMT (Updated: 3 Aug 2021 7:26 AM GMT)

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில தினங்களாக கேரளாவில் தினசரி தொற்று பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. மாநிலத்தில் இதுவரை இத்தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 25 ஆயிரத்து 473 ஆக உள்ளது.

இந்த நிலையில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் தலைமையிலான 6 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்று கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி கேரளா வந்த நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கேரளாவில் தொடர்ந்து அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகி வரும் நிலையில், கொரோனா மேலாண்மைக்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு உதவிடும் வகையில் இந்த குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டாக்டர் எஸ்.கே சிங் தலைமையிலான மத்திய குழு தொற்று அதிகமுள்ள 8 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஏர்ணாகுளம், ஆலப்புழா, கொல்லம், மலப்புரம், கோட்டயம், பத்தினம்திட்டா ஆகிய 6 மாவட்டங்களில் இதுவரை மத்திய குழு ஆய்வுகளை நிறைவு செய்துள்ளது.

தொடர்ந்து திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் கேரளா சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜூடன் ஆலோசனைகள் நடத்தினர். ஆய்வுப்பணி முழுமையாக நிறைவடைந்த பிறகு தொற்றுக்குறைப்பு நடவடிக்கைகளுக்கான பரிந்துரைக்களை மத்திய குழு வழங்க உள்ளது.

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கன்னியாகுமாரி, தேனி, கோவை தமிழக எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story