மராட்டியத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.11,500 கோடி ஒதுக்கீடு - மாநில அரசு ஒப்புதல்


மராட்டியத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.11,500 கோடி ஒதுக்கீடு - மாநில அரசு ஒப்புதல்
x
தினத்தந்தி 3 Aug 2021 9:16 PM GMT (Updated: 2021-08-04T02:46:39+05:30)

மாநிலத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.11,500 கோடியை ஒதுக்கீடு செய்ய மராட்டிய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொங்கன் மண்டலம் மற்றும் மேற்கு மராட்டிய மாவட்டங்களில் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பெய்த கனமழை காரணமாக வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இதற்கு பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 

ஏராளமான மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். சுமார் 2 லட்சம் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக மழை வெள்ளத்துக்கு ராய்காட், ரத்னகிரி, சத்தாரா, சாங்கிலி, கோலாப்பூர் மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டன. 

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று சமீபத்தில் அரசு அறிவித்தது. இந்தநிலையில் நிவாரணம் மற்றும் சேத பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.11 ஆயிரத்து 500 கோடியை மராட்டிய அரசு ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்து உள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

“மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் சேதம் அடைந்த கட்டமைப்புகளை பழுதுபார்க்கும் பணிக்காக ரூ.11 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 

இதில் சில பணிகள் நீண்ட கால நடவடிக்கைகளுக்கானது ஆகும். மாநில பேரிடர் மேலாண்மைத்துறை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்-மந்திரி அஜித்பவாருக்கு அளித்த சேத அறிக்கையின் அடிப்படையில், இந்த தொகையை மந்திரி சபை அனுமதித்து உள்ளது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story