பெகாசஸ் உளவு விவகாரம்: சிறப்பு விசாரணை குழு அமைக்க பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு


பெகாசஸ் உளவு விவகாரம்: சிறப்பு விசாரணை குழு அமைக்க பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு
x
தினத்தந்தி 4 Aug 2021 1:05 AM GMT (Updated: 4 Aug 2021 1:05 AM GMT)

பெகாசஸ் விவகாரத்தை சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

பத்திரிகையாளர்களை பெகாசஸ் மென்பொருளைக் கொண்டு உளவு பார்த்த விவகாரத்தை சிறப்பு விசாரணைக்கு குழு (எஸ்.ஐ.டி.) அமைத்து விசாரிக்க கோரி எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா (இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம்) சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த ரிட் மனுவில், அரசின் அனைத்து துறைகளின் தகவல்களையும், விளக்கங்களையும் பெற்று செய்தியாக்கும் கடமை பத்திரிகையாளர்களுக்கு உள்ளது. இந்தக் கடமையை தங்குதடையின்றி ஆற்ற ஊடக சுதந்திரம் அவசியமாகிறது. ஊடக சுதந்திரத்தில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது. குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு செய்திகளை தருவோரிடமும், அரசின் செயல்பாடற்ற தன்மை குறித்தும், எதிர்கட்சித் தலைவர்களிடமும் பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மையுடனும் பேசுவதே ஊடக சுதந்திரமாகும்.

இந்த ஊடக சுதந்திரத்தில் அரசின் தலையீடு உள்ளதா என்பதை அறிய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்துக்கு உரிமையுண்டு. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கவும், விவாதத்துக்கும் மத்திய அரசு தயாராக இல்லை. எனவே, கோர்ட்டு கண்காணிப்பில் இந்த விவகாரத்தை சிறப்பு விசாரணைக்கு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என கோரியுள்ளது.

Next Story