கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றினால் 3-வது அலையை தவிர்க்கலாம் - மருத்துவ நிபுணர் தகவல்


கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றினால் 3-வது அலையை தவிர்க்கலாம் - மருத்துவ நிபுணர் தகவல்
x
தினத்தந்தி 4 Aug 2021 8:47 AM GMT (Updated: 4 Aug 2021 8:47 AM GMT)

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றினால் 3-வது அலையை நாம் தவிர்க்கலாம் என்று ஒடிசா கொரோனா மருத்துவ நிபுணர் டாக்டர் நிரோஜ் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார்.

புவனேஷ்வர்,

இந்தியாவில் கொரோனா 2-வது அலை சற்று ஓய்ந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 40,000 என்ற அளவில் உள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 500ஐ தாண்டியதாக உள்ளது. அந்த வகையில், கேரளா, தமிழகம், கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. 

இதனையடுத்து கொரோனா 3-வது அலை பரவி வருகிறதா என்ற அச்சத்தில் 3-வது அலையை எதிர்கொள்ள அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்றினால் 3-வது அலையை நாம் தவிர்க்கலாம் என்று ஒடிசா கொரோனா மருத்துவ நிபுணர் தகவல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து கொரோனா மருத்துவ நிபுணர் டாக்டர் நிரோஜ் மிஸ்ரா கூறுகையில், 

மாநில மற்றும் யூனியன் அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும்பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். இதன் மூலம், மூன்றாவது அலையை நாம் தவிர்க்கலாம்.

உட்புற கூட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அரசு கொரோனா பரவலை கட்டுக்குள்ள கொண்டு வர கடுமையான கொள்கைகளை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story