கொரோனா தீவிரம் குறைகிறது: கேரளாவில் கட்டுப்பாடுகள் தளர்வு; வாரத்தில் 6 நாட்கள் கடைகள் திறப்பு


கொரோனா தீவிரம் குறைகிறது: கேரளாவில் கட்டுப்பாடுகள் தளர்வு; வாரத்தில் 6 நாட்கள் கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 4 Aug 2021 8:56 PM GMT (Updated: 2021-08-05T02:26:46+05:30)

கேரளாவில் கொரோனா தீவிரம் குறைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. வாரத்தில் 6 நாட்கள் கடைகள் செயல்படும்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம், கொரோனா தொற்றின் முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்தது. ஆனால் இரண்டாவது அலையில் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. நேற்றும் கூட ஒரே நாளில் 23 ஆயிரத்து 676 பேருக்கு புதிதாக கொரோனா தாக்கி உள்ளது. 148 பேர் பலியாகியும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், கேரள சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும்கூட, நோயின் தீவிரம் குறைந்துள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை தேவைப்படுவோர், தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது தொற்றின் தீவிரம் குறைந்து வருவதை காட்டுகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் தொற்று பாதிப்புக்குள்ளானோர், மீண்டும் தொற்றுக்கு ஆளானோர் பற்றி சுகாதாரத்துறை ஆய்வு செய்துவருகிறது. மீண்டும் தொற்று பாதிப்புக்கு ஆளாவது குறைந்து வருகிறது. அதே நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரளாவில் தொற்று தீவிரம் குறைந்து வருகிற நிலையில், மாநில சட்டசபையில் அறிக்கை அளித்துப்பேசிய சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் சில தளர்வுகளை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

* வாரத்தில் 1000 பேரில் 10 பேர் பாதிக்கப்படுகிற பகுதிகளில் பொது முடக்கம் 3 மடங்காக இருக்கும். மற்ற இடங்களில், தற்போதைய பொதுவான நிலவரத்தையும், தடுப்பூசி போடுதலில் ஏற்பட்டுள்ள முன்னேறத்தையும் கருத்தில் கொண்டு கடைகள் வாரத்துக்கு 6 நாட்கள் திறந்திருக்கும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்படுகிறது.

* சுதந்திர தினம் மற்றும் ஓணம் பண்டிகையை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் வரும் 15-ந் தேதியும், 22-ந் தேதியும் கடைகள் திறந்திருக்கும்.

* அதே நேரத்தில் கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தனிமனித இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

* உள்ளாட்சி அமைப்புகளின் கூட்டங்கள் நடத்தப்படும்.

* அரசியல், சமூக, கலாசார நிகழ்வுகள் பெரும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க தொடர்ந்து தடை செய்யப்பட்டிருக்கும்.

* வழிபாட்டுத்தலங்களில் அதன் பரப்பளவையும், இடத்தையும் பொறுத்து மக்கள் வரலாம் அதிகபட்சம் வழிபாட்டுத்தலங்களுக்கு 40 பேர் வரலாம். திருமணம் மற்றும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேர் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு மந்திரி வீணா ஜார்ஜ் அறிவித்தார்.

Next Story