கொரோனா தடுப்பூசி: மாநிலங்களின் கையிருப்பில் 2.69 கோடி; மத்திய சுகாதார துறை


கொரோனா தடுப்பூசி:  மாநிலங்களின் கையிருப்பில் 2.69 கோடி; மத்திய சுகாதார துறை
x
தினத்தந்தி 5 Aug 2021 1:21 PM GMT (Updated: 5 Aug 2021 1:21 PM GMT)

நாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 2.69 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளன என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.

கொரோனா 2வது அலையின் தீவிர பாதிப்புகளை தொடர்ந்து மக்களிடையே தடுப்பூசி போடுவது அதிகரித்து உள்ளது.  இந்நிலையில், மத்திய சுகாதார துறை இன்று வெளியிட்ட செய்தியில், நாடு முழுவதும் ஜூன் 21ந்தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியது.

அதன்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 51,01,88,510 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அதில், 48,60,15,232 தடுப்பூசிகளை மாநிலங்கள் உபயோகித்துள்ளன. 2,69,06,624 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளன.

இதுதவிர, கூடுதலாக 7,53,620 தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story